Published : 30 Dec 2016 04:17 PM
Last Updated : 30 Dec 2016 04:17 PM

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது: சிம்பு

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம் மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சிம்பு கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சிம்பு வெளியிட்ட அறிக்கை: "ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் செய்கின்றனர்.

அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கியக் கடமை என்று மல்லுகட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.

இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாச்சாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாச்சாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்த சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

தனி ஒரு எஸ்டிஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக் கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப் பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாச்சார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் நம்புகிறேன்.

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம் மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று சிம்பு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x