Published : 18 Jan 2017 01:08 PM
Last Updated : 18 Jan 2017 01:08 PM

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: வாசன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக சென்னை, அலங்காநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் ஒரு புறம் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் கூட மறுபுறம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் மாணவர்களைப் பொறுத்தவரை வருங்கால இந்தியாவை உருவாக்கக் கூடிய தூண்கள், நினைத்ததை சாதிக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் ஒரு குறிக்கோளுக்காக பண்பாட்டை, கலாச்சாரத்தை காப்பதற்காக தங்களது படிப்பை, வேலையை, வீட்டை, உறவினர்களை விட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தடை இருக்கக்கூடாது என்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

முதலில் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலே அரசாங்கம் மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் நிலையை எடுத்துக் கூறி விளக்கி, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, மத்திய அரசு மூலம் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதற்கான வழி வகைகள், சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உடனடியாக அரசு அதிகாரிகள் கலந்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதற்கான மத்திய அரசினுடைய நிலைப்பாட்டிற்கு உச்ச நீதிமன்றம் வலு சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு காலக்கெடுவிற்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசும், தமிழக முதல்வரும், மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கும், மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இதனையே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த பணியை தமிழக நலன் கருதி, மாணவர்கள் நலன் கருதி அரசு உடனடியாக செய்யும் என்று நம்புகிறேன். எனவே இத்தகைய பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x