Last Updated : 16 Sep, 2016 12:28 PM

 

Published : 16 Sep 2016 12:28 PM
Last Updated : 16 Sep 2016 12:28 PM

ஜமாப் அடிக்க பழகியதே பிரச்சினைக்கு வித்திட்டது: பெரிய தடாகம் அருந்ததிய மக்களிடம் ஒலிக்கும் குரல்கள்

‘எங்களுக்கு ஜமாப் அடிக்கவே தெரியாது. 3 வருஷத்துக்கு முன்புதான் எங்கள் கோயில் விசேஷத்துக்காக பழகினோம். தற்போது அதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது’ என்று தெரிவிக்கிறார்கள் பதற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் பெரியதடாகம், பாரதி நகர் தலித் மக்கள்.

கோவையில் புகழ்பெற்ற அனுவாவி சுப்பிரமணியர் கோயிலின் மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பெரியதடாகம், பாரதிநகர் குடியிருப்பு. விநாயகர் சதுர்த்தியன்று இங்கு வசிக்கும் தலித் மக்கள் தனியாக விநாயகர் சிலை வைத்து கொண்டாடியதன் விளைவு, 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களை தாக்கியதாக இதுவரை 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஜமாப் (பறையிசை) அடிக்க தலித் மக்களை அழைத்து, அவர்கள் வரமறுத்துவிட்டதால் பக்கத்து ஊரில் உள்ள ஜமாப் குழுவை அழைத்து பறையடித்தபோது, அவர்களுடன் உள்ளூர் தலித்துகள் ரகளை செய்தார்கள். எனவேதான் பிரச்சினை ஏற்பட்டது’ என்று உயர் ஜாதியினர் தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் கூறப்படுவது குறித்து இந்த காலனி இளைஞர்களிடம் பேசினோம்.

‘நாங்க ஒண்ணும் பரம்பரை பரம்பரையாய் பறையடிப்பவர்கள் அல்ல. ஜமாப் கருவியை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அடித்தே பழகினோம்’ என்றனர். இதுகுறித்து இப்பகுதி இளைஞர்கள் நாகராஜ், சதீஸ் ஆகியோர் கூறியதாவது:

செல்வகணபதி பட்டத்தரசி அம்மாள் பண்டிதகாரசுவாமி, முனியப்ப சுவாமி கோயில் எங்கள் காலனிக்குரியது. இந்த கோயில் ரொம்ப காலமாக பராமரிப்பின்றி கிடந்தது. எனவே மூணு வருஷம் முன்னால கும்பாபிஷேகம் செஞ்சோம். அப்ப ஜமாப் அடிக்க வெளியில போய் ஆள் கூப்பிட்டோம். ஒரு நாளைக்கு கூலியா ரூ.25 ஆயிரம் கேட்டாங்க. அதனால ஆளுக்கு ரூ.1000, ரூ.500-ன்னு போட்டு ஜமாப் கருவிகள் வாங்கினோம். பக்கத்து ஊர்ல ஜமாப் அடிக்கத் தெரிஞ்ச எங்க ஜாதிக்காரர்கள்கத்துக் கொடுத்தாங்க. கும்பாபிஷேகத்தை நாங்களே ஜமாப் அடிச்சு சமாளிச்சுட்டோம்.

அந்த வருஷமே விநாயகர் சதுர்த்திக்கு பெரிய தடாகத்துல உள்ள உயர் ஜாதிக்காரங்க சிலர், விநாயகர் சிலை வச்சாங்க. ஜமாப் அடிக்க கூப்பிட்டாங்க. நாங்க புதுசு, இப்பத்தான் பழகிட்டு இருக்கோம், அதனால முடியாதுன்னுட்டோம். எங்க கோயில்ல ஜமாப் அடிச்சு விளையாடுவதை வழக்கமா வச்சிருந்தோம். அதை அவங்க பார்த்து, அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு ஜமாப் அடிக்க கூப்பிட்டாங்க.

இந்த கருவிகளை சும்மா வச்சிருக்கிறதை விட போய் வாசிச்சா இதோட பராமரிப்பு செலவுக்கு ஆகுமேன்னு போனோம். ஏழெட்டு நாள் விசேஷம். மொத்தம் ரூ.8 ஆயிரம் பேசினோம். அதுவே வெளியில் ஆள் கூப்பிட்டிருந்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 கொடுக்கணும். நம்ம ஊர்க்காரங்களாச்சேன்னுதான் அந்த காசுக்கு செஞ்சோம். ஆனா அப்படி ஜமாப் அடிக்கும்போது எங்க ஜாதியை குறிப்பிட்டு திட்டியதும், அதிகாரம் செஞ்சதும் எங்களுக்கு அருவெறுப்பா இருந்துச்சு. இனிமே இப்படி வெளியிடங்களுக்கு ஜமாப் அடிக்கப் போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டோம்.

அதுக்கடுத்த வருடம் ஜமாப் அடிக்க கூப்பிட்டாங்க. நாங்க வர்றதில்லைன்னு சொல்லிட்டோம். அவங்களும் வெளியாட்களை ஜமாப் அடிக்க வச்சுட்டாங்க.

இந்த வருடம் எங்க காலனியில் விநாயகர் சிலை வச்சு கொண்டாட முடிவு செஞ்சோம். மொத்தமே ரூ.6 ஆயிரம்தான் எங்களுக்குள் வசூலானது.

ஒன்றரை அடி உயர சிலை. அதை இங்கிருந்த தொட்டியில்தான் கரைச்சோம். அதுலதான் இத்தனை பிரச்சினை’ என தெரிவித்தவர்கள் அதையும் விளக்கினர்.

அதாவது, இந்த காலனியில் உள்ள மருதாசலம் என்பவர்தான் ஊருக்குள் ஆழ்துளை கிணறு தண்ணீர் விடும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று மாலை நேரத்தில் தண்ணீர் விட்டுத் திரும்பும்போது பக்கத்து ஊர் ஜமாப்காரர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை, ‘எங்க விநாயகருக்கு பறையடிக்க வராத உனக்கு இங்கே என்ன வேலை?’ என்று சில இளைஞர்கள் தாக்கி உள்ளனர். பிறகு அப்பகுதி பெரியவர்களே, அடித்தவர்களை எச்சரித்து, அடிவாங்கியவரை சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

அன்று இரவு பாரதி நகர் அருகே வந்த சிலர், செங்கற் களை வீசியுள்ளனர். அதில் தலித்துகள் பலர் காயமுற்றதால் அப்பகுதியே கலவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அத்தனை பேரும் துடியலூர் காவல் நிலையம் செல்ல அங்கு சமாதானப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்குப் பிறகு 3 நாள் கழித்து விநாயகர் சிலை விசர்ஜனம் முடிந்த பிறகு தலித் மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்தே, காவல்நிலையத்தையும், ஆட்சியர் அலுவலகத்தையும் இப் பகுதி மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஒதுங்கிக்கொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்

இந்த விவகாரம் குறித்து பெரியதடாகத்தை சேர்ந்த பிரமுகர்களிடம் பேசியபோது, ‘முதல் தாக்குதல் நடந்தபோது திமுக, அதிமுக பாரபட்சமின்றி அத்தனை பிரமுகர்களும் தலையிட்டுத்தான் சமாதானம் பேசி முடித்தார்கள். அதையும் மீறி சிலர் விநாயகர் சிலையை கரைத்தபின்பு ஈடுபட்டதில்தான் பிரச்சினை பெரிசாயிடுச்சு. அதையும் தீர்த்து வைக்க உள்ளூரில் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் தலையிட்டார்கள். கடைசியில் உள்ளூர் அமைச்சர் வரை பிரச்சினை போய் சுமுகமாக முடியும் தருணமும் வந்தது. அதற்குள் ஜாதி இந்துக்கள் பக்கம் சில ஜாதி அமைப்புகளும், அருந்ததியர் மக்கள் பக்கம் சில தலித் அமைப்புகளும் நுழைந்து விஷயத்தை திசை திருப்பி விட்டன. எனவே அனைத்துக் கட்சி பிரமுகர்களும், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க’ என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x