Published : 07 Dec 2016 11:45 AM
Last Updated : 07 Dec 2016 11:45 AM

சோவின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை: ராமதாஸ் புகழஞ்சலி

சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவு குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

1963-ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகம் ஆன சோ ராமசாமி, அதற்கு முன்பே நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தேன்மொழியாள் என்ற மேடை நாடகத்தில் சோ என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அவர் இந்த பெயராலேயே அழைக்கப்பட்டார்.

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இவரது அரசியல் நையாண்டி வசனங்கள் புகழ் பெற்றவை. 'முகமது பின் துக்ளக்' என்ற பெயரிலான இவரது திரைப்படம் இன்று வரை மக்களால் ரசிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் கோமாளித்தனமான முடிவுகளை எடுக்கும் போது அதை துக்ளக் ஆட்சியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது.

துக்ளக் இதழிலும், பிற இதழ்களிலும் சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனாலும் அவரது விமர்சனங்கள் எல்லை மீறாமலும், கண்ணியத்துடனும் அமைந்திருக்கும்.

அனைத்து தலைவர்களையும் விமர்சித்த சோ ராமசாமி, 'மது விலக்கை பாமக மட்டுமே நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. மது மற்றும் புகைக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே உண்மையாக போராடி வருகிறார்' என்று போற்றி பாராட்டியதை மறக்க முடியாது.

தனிப்பட்ட முறையிலும் அவர் எனக்கு சிறந்த நண்பராக விளங்கினார். எனது குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டவர். பாமகவின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் விவாதிப்பார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவரை அண்மையில் நான் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மறைந்திருக்கிறார்.

தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், துக்ளக் பணியாளர்கள் ஆகியோருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x