Published : 01 Jan 2017 04:15 PM
Last Updated : 01 Jan 2017 04:15 PM

சேலம் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறுமா?- புத்தாண்டில் மக்கள் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டுகளில் தொடங்கப் பட்ட திட்டங்கள் நிறைவேறுவதோடு, தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என புத்தாண்டில் சேலம் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வளர்ச்சியடைந்து வரும் சேலம் மாவட்டத்தில், வளர்ச்சியை துரிதப் படுத்த பல திட்டங்கள் நிறைவேற்றப் பட வேண்டியது உள்ளது. மேலும், நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு நடப்பாண்டில் தீர்வு ஏற்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எஃகு நகரம்

மாங்கனி மாநகர் என அழைக்கப்படும் சேலத்துக்கு எஃகு நகரம் என மற்றொரு பெயரும் உண்டு. இந்த சிறப்பு பெயருக்கு காரணமாக இருக்கும் சேலம் இரும்பாலையை மத்திய அரசு தனியார் மயமாக்க முயற்சிகள் நடப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்களும், அரசியல் கட்சியினரும் எதிப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கக் கூடாது என்பதுதான் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பும்.

ஜவுளி, வெண்பட்டாடை, வெள்ளிக்கொலுசு உற்பத்தி ஆகியவற்றில் முன்னணியில் உள்ள சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா, வெள்ளிக்கொலுசு தொழில் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைக்க வேண்டும். சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில், மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்து, சேலம் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், பிற மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்திட வேண்டும்.

விமான நிலையம்

விமான நிலையம் அமைக்கப் படுமா? என பிற மாவட்டங்கள் ஏங்கி வரும் நிலையில், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் பொதுமக்கள் பயன் பெறும் போக்குவரத்து தொடங்கப் பட வேண்டும். சேலம் இரும்பாலை வளாகத்தில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்பெட்டி தொழிற்சாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட வேண்டும்.

சேலத்தில் ரயில்வே கோட்டம் இருக்கும் நிலையில், சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக, தினசரி பகல்நேர விரைவு ரயில் வேண்டும் என்ற கோரிக்கை இதுநாள்வரை எட்டாக்கனியாகவே உள்ளது. ஆத்தூரை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுடன் இணைக்கும் ரயில்பாதை திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

தூர்வார வேண்டும்

மழை மறைவு மாவட்டமாக இருக்கும் சேலம் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டிலும் மழை பற்றாக்குறையாகவே பெய்தது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். அவற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரி, இந்த ஆண்டுக்குள் புதுப்பொலிவு பெற்று, சேலம் மாநகரின் மற்றொரு குடிநீர் ஆதாரமாக மீண்டும் உருப்பெற வேண்டும்.

நீரோட்டம் இன்றி அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சரபங்கா, வசிஷ்ட நதி, ஸ்வேத நதி ஆகியவற்றுக்கு மேட்டூர் அணையின் உபரிநீரை திருப்பிவிடும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும். மேட்டூர் வட்டத்தின் வறண்ட பகுதிகளை வளப்படுத்தும் தோனி மடுவு திட்டம், வசிஷ்ட நதியின் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் கைக்கான்வளவு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தின் மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தையாக, தினமும் பலகோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் தலைவாசல் மார்க்கெட் இட நெருக்கடி காரணமாக, வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மார்க்கெட் செயல்படும் பரப்பளவை அதிகரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளிர்பதனக் கிடங்கு, காய்கறிக் கழிவுகளை உரமாக்கும் மையம், வாகனங்களுக்கு நெருக்கடி இல்லாத சாலை ஆகியவற்றை அமைத்து கொடுத்தால், தமிழகத்தின் மிகப்பெரும் தினசரி காய்கறி சந்தையாக தலைவாசல் மார்க்கெட் உருவெடுக்கும்.

விபத்து குறையுமா?

சேலம் நகரைத்தொட்டும் 4 வழி கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில், சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மட்டும் 9 இடங்களில் 2 வழி கொண்ட சாலையாக இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, 2 வழியாக உள்ள சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்வாகியுள்ள சேலம் மாநகரம் பெருநகரமாக வளர்ச்சியடையக் கூடிய தகுதியைக் கொண்டுள்ளது. ஆனால், இடநெருக்கடியான சாலை இதற்கு முக்கிய தடையாக உள்ளது. எனவே, நகரைச் சுற்றி ‘ரிங் ரோடு’ அமைக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். சேலம் நகரில் நடை பெறும் 5 ரோடு மேம்பாலப் பணி, திருவாக் கவுண்டனூர் மேம்பாலப் பணி, முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலப்பணி ஆகியவை இந்த ஆண்டில் முடிக்கப்பட வேண்டும்.

எதிர்பார்ப்பு ஈடேறுமா?

சேலம் நகரின் மையமாக மாறிவிட்ட புதிய பேருந்து நிலையத்தால் நகரினுள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, உடையாப்பட்டி அருகே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் சேலம் மாவட்ட மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கொண்ட மாவட்டமாக வளர்ந்து வரும் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு துணை செய்யும் மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் மாநில, மத்திய அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தர வேண்டும். இதுவே புத்தாண்டில் எங்களின் எதிர்பார்ப்பு” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x