Published : 16 Sep 2016 12:57 PM
Last Updated : 16 Sep 2016 12:57 PM

சேலத்தில் அலங்கோலமாய் சுற்றிய மனநலம் பாதித்த பெண்: மனிதநேயத்தை கட்டிக்காத்த போலீஸார்

சேலம், புதிய பேருந்து நிலையம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண், நேற்று காலையில் இருந்து மாலை வரை அலங்கோல ஆடையுடன் சுற்றித் திரிந்து வந்தார். அவர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதி வாயிலில் பிச்சை எடுத்து வந்தார்.

திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பகுதிக்கு வருவதில்லை. இந்நிலையில் நேற்று காலை அலங்கோலமான ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். தள்ளுவண்டி கடைக்காரர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் அப்பெண்ணுக்கு ஆடை கொடுத்தனர். ஆனால், அவர் ஆடைகளை வாங்கி ரோட்டில் வீசியுள்ளார்.இதுகுறித்து அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அந்த பெண்ணை அழைத்து செல்ல வரவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேறு வழியின்றி அலங்கோலமாய் சாலையில் அலைந்த பெண்ணை பலரும் வேடிக்கை பொருளாய் பார்த்து சென்றதை சகிக்க முடியாமல், தள்ளுவண்டி கீழே மறைவிடத்தில் அமர வைத்தனர். மதியம் முதல் தள்ளுவண்டியின் கீழே முடங்கியிருந்த அப்பெண் குறித்து, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர் இரண்டு போலீஸாரை சம்பவ இடத்துக்கு ஆடை, பழங்களுடன் அனுப்பி வைத்தார். போலீஸார் ஆடை அணிய அந்த பெண்ணை வற்புறுத்தியும், அவர் அதை முதலில் வீசி எரிந்தார்.

பின்னர் வேறுவழியின்றி மனிதநேயத்தை கட்டிக்காக்கும் பொறுப்பை உணர்ந்து போலீஸார் அப்பெண்ணுக்கு ஆடை அணிவித்து, பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர் வர மறுத்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் போலீஸார் அவரை பார்த்துக் கொள்ளும்படியும், உரிய முறையில் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.

சேலம், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீஸாரின் இந்த நடவடிக்கையை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x