Published : 28 Jun 2016 09:02 AM
Last Updated : 28 Jun 2016 09:02 AM

செலவுக் கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்

தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த மே 16-ம் தேதி நடந்தது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இவை தவிர மற்ற 232 தொகுதிகளிலும் மொத்தம் 3,728 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒவ்வொரு வேட் பாளரும் ரூ.28 லட்சம் வரை செலவழிக்கலாம். தேர்தலின் போதே, அவர்களது செலவுகளை தேர்தல் ஆணையத்தின் செல வினப் பார்வையாளர்கள் கண்காணித்து வந்தனர்.

வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை, தேர்தல் முடிவு அறிவித்து 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப் பிக்க வேண்டும். மே 19-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டதால், இறுதி செலவுக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 18 என கெடு நிர்ணயிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 17 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட் பாளர்கள் 61 பேர், சுயேச்சைகள் உட்பட 165 பேர் தவிர மற்ற வர்கள் அனைவரும் செலவுக் கணக்கை தாக்கல் செய்தனர். செலவுக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தேர்தல் துறை அறிவித்திருந்தது. இந் நிலையில், நோட்டீஸ் அனுப் பும் பணி தற்போது தொடங்கி யுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜூன் 18-ம் தேதிக்கு பின் னரும், பலர் தங்கள் செலவுக் கணக்குகளை தாக்கல் செய் துள்ளனர். மற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக நோட்டீஸ் அனுப்பப் பட்டு வருகிறது. தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு, தேர்தலில் நிற்க 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.

கடந்தமுறை தேர்தல் தொடர் பான வழக்குகளில் சிக்கி, தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியல் செம்மைப் படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கடந்த 25-ம் தேதிக்குள் முடிக்க ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை யில் கடந்த தேர்தலின்போது சேர்க்காமல் விடுபட்ட 2,500 பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட பெயர்கள், இடம் மாறி சென்னை வந்தவர்களின் பெயர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு சேர்க்கப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தற் போதைய வாக்காளர் பட்டிய லைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலையே பயன்படுத்துவர்.

மின்னணு இயந்திரங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு நிலை, அவற்றின் பரிமாற்றம் தொடர்பான விவரங்களை அறியும் வகையில், தேர்தல் ஆணையம் ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எங்கு இருப்பு வைக்கப்படுகிறது என்பதை அறிய முடியும். இதற்கான பயிற்சி அந்தந்த மாவட்ட அலுவலர்களுக்கு ஜூலை 5-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. மின்னணு இயந்திரங்களில் உள்ள ‘பார் கோடு’ அடிப்படையில் இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x