Published : 08 Nov 2016 08:31 AM
Last Updated : 08 Nov 2016 08:31 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நேற்று உத்தரவி்ட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 2014-ல் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உயர் நீதிமன்றத்துக்கு சோதனை அடிப்படையில் 6 மாதங்களுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் சிஐஎஸ்எப் போலீஸாரின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு சார்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.16.60 கோடி ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிஐஎஸ்எப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சிஐஎஸ்எப் போலீ ஸாருக்கு சரியான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. சென்னை துறைமுக பொறுப்புக்கழகமும் இதில் கவனக்குறைவாக உள்ளது. துறைமுக கழகத்துக்கும், சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு மிடையே சரியான ஒத்துழைப் பில்லை. இதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் குறைகளை அதிகாரிகள் சரிசெய்யவில்லை. எனவே இக்குறைகளைக் களைய துறைமுக பொறுப்புக்கழகம் ஒருங்கிணைப்புக்காகவே தனியாக ஒரு அதிகாரியை நியமித்து அதுகுறித்த தகவலை 3 நாட்களுக்குள் சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் அடுத்த விசாரணைக்குள் சரியாக செய்து முடிக்கவில்லை என்றால், சென்னை துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும். அதுபோல தமிழக அரசும் எஞ்சிய பணிகளை செய்து முடிக்க வேண்டும். சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு இதற்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x