Published : 09 Jan 2015 11:15 AM
Last Updated : 09 Jan 2015 11:15 AM

சென்னையில் நிலத்தடி நீர்மட்டமும், தண்ணீரின் தரமும் உயர்ந்துள்ளன : குடிநீர் வாரியம் தகவல்

வடகிழக்குப் பருவ மழைக்கு பிறகு, சென்னையில் நிலத்தடி நீர்மட்டமும், தண்ணீரின் தரமும் உயர்ந்துள்ளன என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

சென்னையின் நிலத்தடி நீர்மட்டத்தையும், அதன் தரத்தையும் 145 கண்காணிப்பு கிணறுகளைக் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு செய்து வருகிறது.

ஜூன் மாதத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு முன் 5.59 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், டிசம்பர் மாதத்தில் பருவமழைக்குப் பிறகு 2.75 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.

நிலத்தடி நீரின் உப்புத் தன்மை குறைந்துள்ளது. அதாவது, ஒரு லிட்டரில் 1000 மி.கி. துகள் இருந்த பகுதிகளில் 600 மி.கி. ஆகவும், 400 மி.கி. துகள் இருந்த பகுதிகளில் 200 மி.கி. ஆகவும் குறைந்துள்ளது. இது, சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஏற்பட்ட விளைவாகும்.

ஜார்ஜ் டவுன், மந்தைவெளி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 1மீட்டரும், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கொரட்டூர், அயனாவரம் ஆகிய பகுதிகளில் 2 மீ., அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, சின்னமலை ஆகிய பகுதிகளில் 3 மீ., புழல், பரங்கிமலை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் 4 மீ. நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,000 குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தபிறகே இந்த இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஜூன் மாதத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு முன் 5.59 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், டிசம்பர் மாதத்தில் பருவமழைக்குப் பிறகு 2.75 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.

நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x