Published : 06 Oct 2016 02:49 PM
Last Updated : 06 Oct 2016 02:49 PM

செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா: ராமதாஸ் வரவேற்பு

செங்கல்பட்டு அருகில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. மருத்துவக் கருவிகளை குறைந்த விலையில் தயாரிப்பதில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் நோயை குணப்படுத்துவதற்கான மருத்துவச் செலவுகளை விட நோயை கண்டறிவதற்கான செலவுகள் தான் அதிகம். மருத்துவக் கருவிகளின் விலையை குறைத்தாலே மருத்துவத்திற்கான செலவை குறைக்க முடியும் என்ற எண்ணத்தில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கும் திட்டத்தை பாமக சேர்ந்த அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கினார்.

மருத்துவப் பூங்கா அமைக்கும் திட்டத்துக்காக தமிழக அரசிடமிருந்து 400 ஏக்கர் நிலத்தை பெற்று, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அதன்பின் வந்த அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது 330 ஏக்கரில் மருத்துவப் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பூங்கா படிப்படியாக உருவாக்கப்பட்டு அடுத்த 7 ஆண்டுகளில் முழுமையடையும். இந்த திட்டம் மூலம் 3000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், மருத்துவக் கருவிகளின் விலை குறையும் என்பதால் இந்த திட்டத்தை தாமதமின்றி செயல்படுத்தப்படுத்த வேண்டும்.

இதேபோல், அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட சென்னையில் ரூ.112 கோடி செலவில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரையில் ரூ.150 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை உள்பட மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்கான அத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x