Last Updated : 31 Jan, 2017 08:06 AM

 

Published : 31 Jan 2017 08:06 AM
Last Updated : 31 Jan 2017 08:06 AM

சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் பயோ காஸ் மூலம் தெரு விளக்கு எரிய வைக்க திட்டம்

வளம் மீட்பு பூங்காவில் ஜெனரேட்டர் பழுதினால் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் தயாரிக்கப்படும் பயோ காஸ் வீணாகி வருவதால், புதிய ஜெனரேட்டரை வாங்கி பேரூராட்சியின் ஒருபகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளை எரியவைக்க திட்டமிட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் பேரூராட்சியில் கடந்த 2008-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பை, உணவு கழிவுகளைச் சேகரிக்கும் பணிகளை ’ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற நிறுவனம் செய்து வருகிறது. இவற்றைத் தரம் பிரித்து, உரம் தயாரிப்பதற்காக மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ’பசுமை நண்பர்கள்’ எனப்படும் ஊழியர்கள் மூலம் மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

மேலும், உணவு கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிப்பதற்காக 100 கன மீட்டர் மற்றும் 50 கன மீட்டர் கொள்ளளவுடன் கூடிய இரண்டு இயற்கை எரிவாயு கலன் அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நாள் ஒன்றுக்கு 5.5 டன் குப்பை, 800 கிலோ உணவுக் கழிவுகள் சேகரமாகிறது. உணவு கழிவுகளைப் பயன் படுத்தி, பயோ காஸ் தயாரித்து ஜெனரேட்டருக்கு பரிமாற்றம் செய்து, வளம் மீட்பு பூங்காவின் 30 மின் விளக்குகள் எரியவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வார்தா புயலால் ஜெனரேட்டர் சேதமடைந்ததால் பயோகாஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், அது வீணாகியும் வருகிறது. இதனால், புதிய ஜெனரேட்டரை வாங்க ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், வளம் மீட்பு பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் பயோகாஸை, 15 கிலோவாட் திறன்கொண்ட ஜெனரேட்டரின் உதவியுடன் 100 வாட்ஸ் கொண்ட 60 எல்இடி பல்புகளை எரிய வைக்க முடியும் என்பதால், மாமல்லபுரம் பேரூராட்சியின் ஒருபகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளை எரியவைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனினும், திட்டத்தை செயல்படுத்த 15 கிலோவாட் திறன் கொண்ட ஜென ரேட்டர் தேவைப்படுகிறது.இத னால், பேரூராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து ஜென ரேட்டர் வாங்க திட்டமிடப்பட் டுள்ளது.

நிதி கிடைக்கும்பட்சத்தில் விரைவில் மாமல்லபுரத்தில் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் மின் விளக்குகள் ஒளிரவுள்ளன.

இதுகுறித்து, வளம் மீட்பு பூங்காவை பராமரிக்கும் ’ஹேண்ட் இன் ஹேண்ட்’ நிர்வாகி பரிசுத்தம் கூறியதாவது: வார்தா புயலில் ஜெனரேட்டர் பழுதடைந்ததால், பயோகாஸை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனினும், 15 கிலோவாட் திறன்கொண்ட ஜெனரேட்டர் இருந்தால், பேரூராட்சியின் தெரு மின் விளக்குகளை எரியவைக்கலாம் என, ஆலோசனை தெரிவித்திருந்தோம். இதனால், புதிய ஜெனரேட்டர் வாங்க பேரூராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது என்றார்.

ஜெனரேட்டர் பழுது

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் கூறியதாவது:

ஏற்கெனவே இருந்த ஜெனரேட்டர் ’ஹேண்ட் இன் ஹேண்ட்’ நிறுவனத்தால் வாங் கப்பட்டது. ஜெனரேட்டர் பழு தடைந்துள்ளதால், பயோ காஸ் வீணாகி வருகிறது.

அதனால், பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி புதிய ஜெனரேட்டர் வாங்க திட்டமிட் டுள்ளோம். இதை செயல்படுத் தினால் மின்சார கட்டணம் மிச்சமாகும். மின் தேவையும் குறையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x