Published : 14 Aug 2015 04:06 PM
Last Updated : 14 Aug 2015 04:06 PM

சுதந்திர தினம் முதல் முழு மதுவிலக்கு: ராமதாஸ் கோரிக்கை

இந்திய சுதந்திர தினமான நாளை முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வறட்சி, நதிநீர் பிரச்சினை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என எத்தனையோ பிரச்சினைகள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தையும் கடந்த சமூகப் பேரழிவாக உருவெடுத்திருப்பது மதுவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தான். மதுவின் கொடுமைகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் நமது மனசாட்சியை உலுக்குவதாக அமைந்திருக்கின்றன.

உலகில் மிக மோசமான கலாச்சார சீரழிவைச் சந்தித்த நாடுகளுக்குச் சென்று, ‘‘உங்கள் நாட்டில் 4 வயது குழந்தை என்ன குடிக்கும்?’’ என்று கேட்டால், ‘பால் குடிக்கும்’ என்பது தான் பொதுவான பதிலாக இருக்கும்.

ஆனால், கலாச்சாரத்தின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் இந்த கேள்வியை துணிச்சலாகக் கேட்க முடியாது. காரணம்... 4 வயது குழந்தைக்குக் கூட மதுவைப் புகட்டிக் கெடுக்கும் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது.

மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என யாரெல்லாம் தூய்மையின் உருவமாக கொண்டாடப்பட்டார்களோ, அவர்கள் அனைவரும் மது வலையில் வீழ்த்தப்படும் அவலம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் காரணம்.... தெருவுக்குத் தெரு கடை திறந்து மதுவை மிக எளிதாக கிடைக்கும் பொருளாக மாற்றியதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகளைத் திறந்து மதுவை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டைத் தாண்டவில்லை. ஆனால், இதேகாலத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த லாபத்தின் சராசரி வளர்ச்சி விதிதம் 20 விழுக்காட்டுக்கும் குறையவில்லை. இந்த காலத்தை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எதன் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதை இந்த புள்ளி விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வு ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை அதிக இடங்களில் திறந்து மக்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்தார்களாம். அதேபோல் தான் தங்களுக்கு எதிராக குரல் கொடுத்துவிடக்கூடாது என்று தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் அதிக அளவில் மதுக்கடைகளை திறந்து மக்களின் உணர்வுகளை சிதைத்து விட்டன.

மது அரக்கனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த சில மாதங்களாக பாமக சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்புப் போராட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் பெண்கள் திரண்டு வருகின்றனர். மதுவுக்கு எதிரான மகளிரின் மனநிலையை இந்தப் போராட்டங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக மக்களை அவமானப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் இரு மதுக்கடைகள் வீதம் 500 எலைட் மதுக்கடைகளை திறந்து வருகிறது. இதுபோன்ற மக்கள் நலனுக்கு எதிரான செயல்களை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நேரம் வரும்போது தங்களின் வலிமை என்ன என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இனி வரும் காலத்திலும் நிரூபிப்பார்கள் என்பது உறுதி.

இறுதியாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற பின் மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட, ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற திரைப்படத்தின் அறிமுக விழா 26.11.1992 அன்று சென்னையில் நடந்தது.

அந்த விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள் முதலில் தம்மை அழித்துக் கொள்கிறார்கள்.அடுத்து அவர்களைச் சார்ந்திருப்பவர்களை நிலையான பாதிப்புக்கு ஆட்படுத்துகிறார்கள். குறிப்பாக, மனைவி, மக்களின் நலன் முழுமையாக புறக்கணிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது சந்ததியினரின் மனநலத்திற்கும் பெரும் பாதிப்பையும், தீங்கையும் விளைவிக்கிறார்கள். இப்படி இவ்வளவு தீமைகளை விளைவிக்கக்கூடிய மதுப்பழக்கம் தேவைதானா? பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும், நியாயத்தோடு எழ வேண்டிய நேர்மையான கேள்வி இது’’ என்று கூறினார்.

ஜெயலலிதா கூறியபடி அவருக்கு மக்கள் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் இருந்தால், இந்திய சுதந்திர தினமான நாளை முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்... அவர் செய்வாரா?'' என்று ராமதாஸ் கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x