Published : 07 Dec 2016 03:28 PM
Last Updated : 07 Dec 2016 03:28 PM

சிறந்த அரசியல் விமர்சகர் சோ- ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி

சிறந்த அரசியல் விமர்சகரான சோ, அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அணுகுமுறை பற்றி தயக்கமின்றி விமர்சித்தவர் என்று ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சோ திரையுலகில் ஜொலித்தவர். துக்ளக் உள்ளிட்ட அரசியல் விமர்சன நாடகங்களை அவரும் நடித்து, அரங்கேற்றி நடத்தியவர். பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

1975-ம் ஆண்டு மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசர கால பிரகடனம் செய்து, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதை சோ கடுமையாக எதிர்த்தார்.

சிறந்த அரசியல் விமர்சகரான சோ அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அணுகுமுறை பற்றி தயக்கமின்றி விமர்சிப்பார். தான் நடத்திய துக்ளக் இதழின் சார்பாக ஆண்டு தோறும் வாசகர்கள் கூட்டம் நடத்தி அரசியல் நிகழ்வுகள் பற்றி தயக்கமின்றி பேசுவார்.

திரையுலக கலைஞராக, அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக விளங்கிய சோ மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x