Last Updated : 31 Jan, 2017 10:10 AM

 

Published : 31 Jan 2017 10:10 AM
Last Updated : 31 Jan 2017 10:10 AM

சின்ன நீலாங்கரை குப்பத்தில் 20 மீனவக் குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஊர் பஞ்சாயத்து: 5 ஆயிரம் அபராதம் விதித்து காலில் விழ வைத்த கொடுமை

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சின்ன நீலாங்கரை குப்பத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 20 மீனவக் குடும்பங்களை ஊர் பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளது.

ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் 300 பேர் முன்னிலையில் காலில் விழ வைத்தும் கொடுமை செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சின்ன நீலாங்கரை குப்பத்தில் சுமார் 300 மீனவக் குடும்பங்கள் உள்ளன. மீன் பிடிப்பது, மீன் விற்பனை உள்ளிட்ட மீன்பிடி சார்ந்த தொழில்கள்தான் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலையில், ஊர்க்கட்டுப் பாட்டை மீறியதாக 20 குடும்பங்களை ஊர் பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் அவர்கள் மீன்பிடி தொழிலை செய்ய முடியாத நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களில் ஒருவரான மேகநாதனிடம் கேட்டபோது, ‘‘கடந்த அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஊர் பஞ்சாயத்து கூடி, ‘நமது குப்பம் சார்பில் ரூ.25 லட்சம் தரும் ஒருவரை நிறுத்தப் போகிறோம். அவருக்கு தான் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என கூறினார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்பிறகு, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிக்காக சுமார் 20 பேர் சென்றோம். ஊர் கட்டுப்பாட்டை மீறிச் சென்றாக எங்களை ஒதுக்கி வைப்பதாக ஊர் பஞ்சாயத்து அறிவித்தது. அதுமுதல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். நாங்கள் பிடிக்கும் மீன்களை யாரும் வாங்க விடாமல் தடுப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். சமீபத்தில் ஊர்விலக்கம் செய்யப்பட்ட ஒருவரின் குடும்பத்தில் வளைகாப்பு நடந்தது. அதில் அவர்களின் உறவினர்களைக் கூட கலந்து கொள்ள விடாமல் தடுத்து விட்டனர்'' என்றார்.

மற்றொரு மீனவர் மோகன் கூறும்போது, “ஒன்றரை டன் எடை கொண்ட மோட்டார் படகுகளை இழுக்க ஊர் சார்பில் டிராக்டர் ஒன்று பயன்பாட்டில் உள்ளது. ஊர்விலக்கத்துக்குப் பிறகு அதனை நாங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இதனால் தோளில் சுமந்து ஒன்றரை மணி நேரம் போராடிய பிறகு படகுகளை கரைக்கு கொண்டு வர வேண்டியுள்ளது.

கரைக்கு வரும்போது படகுகள் கவிழ்ந்தால் அதனை இழுத்து கரை சேர்க்க 50 பேர் வேண்டும். எங்களுக்கு யாரும் வர மறுப்பதால் தொழிலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். ஊர் மைதானத்தில் எங்கள் குழந்தைகள் விளையாடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ‘ஒதுக்கி வைப்பதுன்னா என்னப்பா?’ என எங்கள்

குழந்தைகள் கேட்கிறார்கள். நான் உட்பட 5 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் 300 பேர் முன்னிலையில் காலில் விழச் செய்தனர். அப்படி செய்தும் எங்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது'' என்றார்.

இப்பிரச்சினை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் கடந்த 27-ம் தேதி சின்ன நீலாங்கரை குப்பத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறும் மீனவர்கள், அவரது எச்சரிக்கைக்குப் பிறகே ஊரில் உள்ள கடைகளில் தங்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகின்றனர். நீலாங்கரை காவல் நிலையத்திலும் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.

எங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டு வழக்கம்போல மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x