Last Updated : 01 Aug, 2015 05:06 PM

 

Published : 01 Aug 2015 05:06 PM
Last Updated : 01 Aug 2015 05:06 PM

சித்திரமும் செந்தமிழும்: சிங்காரச் சென்னைக்கு புது முயற்சி!

பரபரப்பான சென்னையின் நெருக்கடி மிகுந்த சாலையின் வழியே பயணிக்கிறீர்கள். அவசரமான வேலை. வெயிலின் தாக்கம் வேறு அதிகமாக இருக்கிறது. மரங்கள் அதிகம் இல்லாமல், காற்றின் சுவடே தெரியாமல் வறண்டு கிடக்கிறது சாலை. சலித்தபடியே பயணத்தைத் தொடர்கிறீர்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்துக்குச் செல்ல, இம்முறையும் சாலையும் தெருவும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் பளிச்சென்ற மாற்றம். என்ன நடந்தது?

சாலை நெடுங்கிலும் இருந்த சுவர்கள் முழுக்கவும் வண்ணங்கள் குழைத்த ஓவியங்கள் உங்களை வரவேற்று இருக்கக்கூடும். 'தி பெயின்ட் பாக்ஸ்' என்னும் அமைப்பு சாலையோர சுவரோவியங்களை முன்னெடுத்து வருகிறது.

இதன் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. நம்ருதா, ஹரிஹரன், தேஜஸ் என்னும் மூன்று இளைஞர்கள் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். பெயிண்ட்பாக்ஸ் அமைப்பு குறித்து நம்ருதா நம்மிடம் இது குறித்துப் பேசினார்.

"வேலை காரணமாகப் புதிதாக ஓர் இடத்துக்குச் சென்றேன். அந்த சாலையில் இருந்த சுவர்கள் அனைத்தும் மிகுந்த அழுக்குடன், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, நீண்ட நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்தன. சாலை வழியே நடக்கக்கூட முடியவில்லை.

பொது மக்கள் எல்லோரும் அச்சுவர் இருந்த பகுதியை விட்டு ஒதுங்கியே நடந்து சென்றனர். பொது சேவைகளில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு, எதையாவது செய்து அந்நிலைமையை மாற்ற வேண்டுமென்று தோன்றியது. அப்போது உதித்ததுதான் பெயின்ட்பாக்ஸ் யோசனை" என்றார்.

குறிப்பிட்ட தீம் எதையும் வைத்துக் கொள்ளாமல், வித்தியாசமான, அழகான, எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடிய ஓவியங்களை வரைகின்றது இவ்வமைப்பு. ஒவ்வொரு வாரத்தின் இறுதிகளிலும் நகரின் பல்வேறு சுவர்ப் பகுதிகளிலும் தவறாமல் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதைத் தவிர்த்து, மாதம் ஒரு முறை, "சுவர்களில் கவிதைகள்" என்ற நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் கவிதைகள் எழுதப்பட்டு, ஓவியங்களும் வரையப்படுகின்றன. இதுவரை ஏராளமான பாரதியார் கவிதைகள், திருக்குறள்கள் ஆகியவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்நிகழ்வில், இப்போது சாமான்ய மக்களின் கவிதைகளையும் எழுதத்தொடங்கி இருக்கின்றனர் பெயின்ட்பாக்ஸ் அமைப்பினர். அத்தோடு கவிதைகளை வாசித்துக் காட்டிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கவிதைகளைப் பற்றியும், சுற்றுப்புறத்தைச் சுத்தமாய் வைத்திருப்பது பற்றியும் பேசுகின்றனர்.

இம்முயற்சிக்கு மக்களிடையே பெரியளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில், இந்த அமைப்பு தன்னார்வலர்களின் உதவியுடன் ஓவியங்களை வரைகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், அடுத்த நிகழ்வு நடக்கும் இடத்தையும், நேரத்தையும் பதிவிடுகின்றனர். வரைய விருப்பம் தெரிவித்து பதிவிடுபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை ஒருங்கிணைக்கின்றனர்.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் பணிகளில் விருப்பமுள்ளவர்கள் இவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தை லைக்கிட்டு, வரும்கால நிகழ்வுகளை அறிந்துகொள்ளலாம். இணைப்பு: >The Paint Box

பிளாஸ்டிக்காலும், தூசு, புகை, குப்பைகளாலும் நிறைந்து கிடக்கும் சென்னையின் சுற்றுப்புறங்களை, நாமும், நம்மால் இயன்ற அளவு ஓவியங்களாலும், கவிதைகளாலும், அழகாக்கலாமே!

படங்கள்:எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x