Published : 22 Mar 2017 09:33 PM
Last Updated : 22 Mar 2017 09:33 PM

சனமங்கலம் ஊராட்சியில் யானைகள் காப்பகம் அமைக்க வாய்ப்பில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

மண்ணச்சநல்லூர் தொகுதி, சனமங்கலம் ஊராட்சியில் யானைகள் காப்பகம் அமைக்க வாய்ப்பில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேரவையில் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. மண்ணச்சநல்லூர் தொகுதி, சனமங்கலம் ஊராட்சியில் யானைகள் காப்பகம் அமைக்க அரசு முன்வருமா என்று அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு.பரமேஸ்வரி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேரவையில் பேசியதாவது:

''மண்ணச்சநல்லூர் தொகுதி உட்பட திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு வனப்பகுதியிலும் யானைகள் நடமாட்டம் தொன்று தொட்டே இல்லாத காரணத்தால், மண்ணச்சநல்லூர் தொகுதி, சனமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் யானைகள் காப்பகம் அமைக்க வாய்ப்பு இல்லை.

இருப்பினும் மண்ணச்சநல்லூர் தொகுதி சனமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் அருகாமையில் உள்ள பரமரெட்டி பாளைய காப்புக் காட்டில் யானைகள் புனர்வாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

யானைகள் ஒரு குறிப்பிட்ட குறுகிய எல்லைக்குள் வாழும் தன்மை இல்லாதது மட்டுமன்றி, பரந்த வனப்பகுதியில் வாழ விரும்பும் விலங்கினமாகும். யானைகளின் இடப்பெயர்ச்சிப் பாதை, வழித்தடம், நடமாட்டம் இவை அனைத்தும் யானைகளுக்கு கிடைக்கும், வாழ்விட வசதி, இயற்கை சூழ்நிலை வசதி, தீவனத்திற்கேற்ற தாவரங்கள் கிடைக்குமிடம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

ஆகவே, யானைகளுக்கான தொன்று தொட்டு வாழ்விடமாகவும், யானைகள் நீண்டகால வழித்தடங்களாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே, யானைகள் காப்பகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கும். இருப்பினும், சனமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் சுமார் 19.80 எக்டேர் பரப்பில் அமைந்துள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திருச்சி மாவட்டத்தினை சுற்றி உள்ள தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கு, ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், இயற்கை தன்மை மாறாமல் இருப்பதற்காகவும் சீரிய முறையில் பயன்பட்டு வருகிறது.

இந்த மறுவாழ்வு மையத்தில், யானைகள் தங்கவும், சத்தான உணவு தரவும், குளியல் வசதி மற்றும் மருத்துவ வசதி வழங்கவும், யானைப் பாகன்கள் தங்கவும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த மறுவாழ்வு மையத்தினை மேம்படுத்தும் பணிக்காக நடப்பாண்டிலும் ரூ.37.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x