Published : 01 Jan 2017 07:26 PM
Last Updated : 01 Jan 2017 07:26 PM

சசிகலா விரைவில் முதல்வராவார்: ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் நம்பிக்கை

பொதுச்செயலாளராக பொறுப் பேற்றுள்ள சசிகலா விரைவில் முதல்வர் பதவியையும் ஏற்பார் என அமைச்சர்கள் தெரிவித் துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது தோழி சசிகலா அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரும் நேற்று முன்தினம் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியை நடத்திச் செல்வேன் என சூளுரைத்துள்ளார்.

முன்னதாக, சசிகலாவை பொதுச்செயலாளராக பதவியேற்க வலியுறுத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அவரை தமிழக முதல்வராகவும் முன்னிறுத்தினர். இந்நிலையில், பொதுச் செயலாளராகியுள்ள சசிகலா, தமிழக முதல்வராகவும் விரைவில் பொறுப்பேற்பார் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பாக இருப்பார்

அப்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, ‘‘அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார். அவர் பொதுச்செயலாளராக பதவியேற்றத்தில் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் கட்சியை நடத்திச் செல்வோம் என்ற உறுதிமொழியை அவர் எடுத்துள்ளார், அவருக்கு உண்மை தொண்டர்கள் துணையாக இருப்பார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல், தற்போது பொதுச் செயலாளராகியுள்ள சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் முதல்வர் பொறுப்பையும் அவர் ஏற்பார்’’ என்றார்.

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது, ‘‘முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவர் முதல்வராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்’’ என்றார். இதே கருத்தை அறநிலை யத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் தெரிவித் துள்ளார்.

வரவேற்பு அதிகரித்துள்ளது

சசிகலா தொடர்பாக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறும்போது, ‘‘தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது.பொதுச்செயலாளராக இருக்கும் அவர் முதல்வராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, ‘‘அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளராக இருப் பவரே முதல்வராகவும் இருந்துள் ளார். எனவே சசிகலா விரைவில் முதல்வராவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடு வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

இவ்வாறாக அமைச்சர்கள் பலரும் சசிகலா முதல்வராக வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x