Published : 31 May 2016 01:11 PM
Last Updated : 31 May 2016 01:11 PM

கோவை: டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற அதிமுக கவுன்சிலர் வலியுறுத்தல்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்:

இலவச மின்சாரம்

கோவை சின்னியம் பாளையத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சு.முத்துக்குமாரசாமி, தமிழக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் தனக்கு வேண்டாம் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், "முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பின்னர் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்ததை வரவேற்கிறேன்.

தையல் வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எனக்கு ஓரளவு வருமானம் உள்ளது. இலவச மின்சார சலுகையினால் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதும், இதனால், அரசுக்கு ரூ. 1607 கோடி இழப்பு ஏற்படும் என்பதும், அரசு அதனை ஈடு செய்ய உள்ளதையும் அறிகிறேன். இதில், எனது பங்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை திரும்ப ஒப்படைக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கை சாவில் சந்தேகம்

தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஈச்சனாரியை சேர்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில், "எனது தங்கை சகுந்தலாவை (34) வடக்கிபாளையத்தைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தோம்.

குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனது தங்கை விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து தகவல் வந்தது. அப்போதே அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனக் கூறி போலீஸில் புகார் அளித்தோம். எனது தங்கையும், இறப்பதற்கு முன்பாக தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீஸில் மனுக்கள் அளித்தார்.

எனவே, அவரது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தங்கை சாவு குறித்து விசாரண நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

டாஸ்மாக்

தங்களது பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாநகராட்சி 68-வது வார்டு அதிமுக கவுன்சிலர் க.சக்திவேல் மனு அளித்தார். அதில், "ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலை பகுதியில் 17 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.

குடியிருப்புகள், பள்ளிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட பொது மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் மதுக்கடை அமைந்திருப்பதால் மதுக் குடிப்பவர்கள் சாலையில் விழுந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். மேலும், பல்வேறு சிரமங்களுக்கும் பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதல்கட்டமாக இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கதவடைப்பு

கோவை அத்திப்பாளையம் சாலை சின்னவேடம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பம்ப் உற்பத்தி நிறுவனம், கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளதாக கூறி கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துவிட்ட பின்னர் தற்காலிக உற்பத்தி நிறுத்தம் என மாற்றி 435 நாட்கள் ஆகிறது. இந்த கதவடைப்புக்கு அரசுத் துறை அனுமதியை அவர்கள் பெறவில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வருமானம் இழந்து பசி பட்டினியோடு வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து விசாரித்து தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x