Published : 30 Dec 2016 06:36 PM
Last Updated : 30 Dec 2016 06:36 PM

குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது: திருமாவளவன்

குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்டும், மாரடைப்பாலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. காவிரியில் நீர் வராமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், பருவமழை பொய்த்துப் போனதால் வாழ்வாதாரத்தை இழந்து மனமுடைந்து போயுள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகிப்போனதைக் கண்ட அதிர்ச்சியாலும், கடன் சுமையாலும் கடந்த சில மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பிலும், தற்கொலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. 2014-ம் ஆண்டில் மட்டும் 68 விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டனர் என தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை தெரிவிக்கிறது.

பயிர் பொய்த்துப்போவதும், கடன் சுமையும் தான் விவசாயிகள் தற்கொலைக்கு முதன்மையான காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ அதற்குக் காரணம் குடும்பப் பிரச்சினை எனச் சொல்லி விவசாயிகளின் சாவையும் கொச்சைப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுமே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பிவருகின்றனர். இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்டும், மாரடைப்பாலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். வறட்சி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கும் உதவும் விதமாக நூறுநாள் வேலையை இந்த ஆண்டு 200 நாட்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x