Published : 01 Aug 2015 10:18 AM
Last Updated : 01 Aug 2015 10:18 AM

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக சார்பில் அகரம் பெரவள்ளூர் சதுக்கத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் இதில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 மாதங்களில் ‘பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் 13 கூட்டங்களை நடத்தியுள்ளோம். அப்போது, வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும், பல நேரங்களில் குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருவதாகவும் 99 சதவீத மக்கள் புகார் தெரிவித் தனர். அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

நானும், மா.சுப்பிரமணியனும் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது முக்கிய துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அப்படி எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், வந்து கொண்டிருந்த குடிநீரும் இப்போது வரவில்லை. சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 83 கோடியே 4 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், தற்போது 62 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

உலகில் எந்த நாடும் குடிநீரை விற்றதாக வரலாறு இல்லை. எனவே, ரூ. 10-க்கு விற்கப்படும் அம்மா குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும். சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில் சிறை நிரப் பும் போராட்டம் நடத்த நேரிடும்.

சட்டப்பேரவை தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் ரூ. 6 கோடிக் கான திட்டங்களை நான் கொடுத்துள் ளேன். ஆனால், அதில் ரூ. 1 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. திருவிக நகரில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட சமூக நலக் கூடத்தை புதிதாகக் கட்ட தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடி வழங்கினேன். ஆனாலும் அதனை அரசு செயல்படுத்தவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x