Published : 09 Jul 2017 11:12 AM
Last Updated : 09 Jul 2017 11:12 AM

கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும்: திமுக

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் அவரை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தொடரும் என்று திமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தெற்கு அமைப்பாளரும் எம்எல்ஏவான சிவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன உறுப்பினர்களை நியமிப்பது சம்பந்தமாக புதுச்சேரியை ஆளுகின்ற காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் பரிந்துரையோ, ஆலோசனையோ இல்லாமல் சர்வாதிகார முறையில் மத்திய பாரதிய ஜனதா அரசின் அழுத்தத்தின் காரணமாக, தாமாக 3 ஆர்.எஸ்.எஸ்., நபர்களை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.

புதுச்சேரி சபாநாயகரின் அறிவுரையை மீறி ஆளுநர் மாளிகையில் இரவோடு இரவாக பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஜனநாயக மரபுகளையும், மாநில மக்களின் உரிமைகளையும் புறம்தள்ளி ஜனநாயக படுகொலை நிகழ்த்தினார்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியையும், அவருக்கு உறுதுணையாக இருந்து இந்த படுகொலைக்கு வழிவகுத்த மத்திய பாரதிய ஜனதா அரசையும் கண்டித்து திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல சமூக, அரசியல் அமைப்புகள் நடத்திய பந்த் போராட்டம் முழு வெற்றியடைந்துள்ளது. தொழிலாளர்களும், பொதுமக்களும் இந்த போராட்டத்தை தங்களது உரிமை போராட்டமாக கருதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, சட்டத்தை புறக்கணித்து தான்தோன்றித்தனமாக செயல்படும் ஆளுநர் கிரண்பேடிக்கு கொடுத்துள்ள சவுக்கடியாகும். இதை உணர்ந்து மத்திய அரசு கிரண்பேடியை திரும்ப பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இல்லை என்றால் அவருக்கு எதிர்ப்பான புதுச்சேரி மக்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x