Published : 06 Oct 2016 12:22 PM
Last Updated : 06 Oct 2016 12:22 PM

காவிரி: தமிழக உரிமையை வலியுறுத்தி அக்.8-ல் தமாகா ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற்றுத்தர வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி தமாகா சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், '' வரும் 8-ம் தேதி அன்று தமாகா சார்பில் விவசாயிகள் நலன் காக்க, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் காலை 10.30 மணி அளவில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டின்படியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடியும் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு முறையாக, முழுமையாக தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. காவிரி நீர் உரியகாலத்தில், கால அட்டவணைப்படி கிடைக்கப்பெறாமல் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு, விவசாயத் தொழிலும் நலிவடைந்து போகின்றது. இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க முன்வரவில்லை.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுப்பதோடு, கர்நாடகாவில் வன்முறைச் சம்பவங்களை தூண்டிவிட்டு தமிழர்களை தாக்கி, அவர்களது உடமைகளை சேதப்படுத்தி, தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களை எரித்தனர். இதற்கான நஷ்ட ஈட்டையும் இதுவரை வழங்கவில்லை.

எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு முறைப்படி, முழுமையாக தண்ணீர் திறந்துவிட வேண்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க முன்வர வேண்டும், தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தமாகாவின் முன்னணித் தலைவர்கள், டெல்டா மாவட்டப் பகுதிகளில் உள்ள தமாகாவின் மாவட்ட தலைவர்கள், இயக்கத்தினர், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

எனவே மத்திய, மாநில அரசுகள் சட்டத்தின் அடிப்படையிலும், நீதியினை மதித்தும், கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்டும், இந்திய ஒற்றுமையைப் பேணிக்காக்கவும் உறுதியுடன் செயல்பட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x