Published : 09 Jul 2017 09:35 AM
Last Updated : 09 Jul 2017 09:35 AM

காரைக்காலில் மாங்கனி திருவிழா: பழங்களை வீசி இறைவனை வழிபட்ட பக்தர்கள்

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மாங்கனிகளை வீசி இறைவனை பக்தர்கள் வழிபடும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத் துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப் பட்டவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் கைலாசநாதர் கோயில் தேவஸ் தானம் சார்பில் காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் ஒரு மாதத்துக்கு மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 6-ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மாங்கனிகளை வீசி இறைவனை பக்தர்கள் வழிபடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வீடுகளின் மாடியில் இருந்து மாங்கனிகளை வீசும் பெண்கள் | படம்: வீ.தமிழன்பன்

இதையொட்டி, நேற்று அதிகாலை 2.30 மணியில் இருந்து காரைக்கால் அம்மையார் கோயிலில் பிச்சாண்டவர் கோலத்தில் உள்ள சிவபெருமான் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வீதியுலாவுக்காக சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார்.

பின்னர், காலை 7 மணியளவில் அம்மையார் கோயில் வாயிலில் இருந்து வீதியுலா புறப்பாடு தொடங்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக் கானோர் நீண்ட வரிசையில் நின்று இறைவனுக்கு மாங்கனிகளை படைத்துச் சென்றனர்.

வீதியுலாவின்போது, சாலை கள், வீடுகள், கடைகள் மற்றும் மாடிப் பகுதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள், நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். அவர்கள் வீசும் மாங்கனிகளைப் பிடிக்க பக்தர்கள் போட்டி போட்டனர். அந்த மாம்பழத்தை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

வீதியுலாவின் நிறைவில் அம்மையார் கோயில் அருகே பிச்சாண்டவர் வரும்போது புனிதவதி அம்மையார் எதிர் கொண்டு அழைத்து கோயிலுக்குள் சென்று மாங்கனியுடன் பல வகை சித்ரான்னங்கள், முறுக்கு, பழ வகைகளுடன் சிவபெருமானுக்கு அமுது படையல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவுக்கு பிறகு, காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆகஸ்ட் 7-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு அம்மையார் மணிமண்டபத்தில் தினமும் மாலை வேளையில் பரத நாட்டியம், இசைக் கச்சேரி, இலக்கியச் சொற்பொழிவு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x