Published : 23 May 2015 07:40 AM
Last Updated : 23 May 2015 07:40 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதலில் ரூ.10 கோடி ஊழல்: டிஆர்ஓ-விடம் விவசாயிகள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதலில் ரூ.10 கோடிக்கு முறைகேடு நடைபெற் றுள்ளதாகவும், அதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கட்டிடத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) சம்பத் தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் நாடு விவசாய சங்கத்தினர் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு கிடப்பதால், சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனிடையே, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட 24 கொள்முதல் நிலையங்களில், காஞ்சிபுரம், சிறுகாவேரிபாக்கம், தென்னேரி, திருப்புலிவனம், வேடபாளையம், சீத்தாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சில இடங்களில், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களும், வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து, ஆந்திராவிலிருந்து கிலோ நெல் ரூ. 10 வீதம் வாங்கி வந்து, இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததாக கிலோ ரூ. 14.70-க்கு ரசீது போட்டு முறைகேடு செய்துள்ளனர். இதுபோல, கடந்த 3 மாதங்களில் 15,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வேடபாளையம், திம்மாவரம் கிடங்குகளில் வைக் கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ. 10 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல், தமிழ்நாடு நீர் வடிகால் முகமை திட்டத்தில் வேளாண்துறை உதவியுடன் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை சீரமைக்க ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை அனுமதி உண்டு. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித பாரமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் புகார் கூறினர்.

இந்த புகார்கள் குறித்து பேசிய சம்பத் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x