Published : 22 Mar 2017 08:15 AM
Last Updated : 22 Mar 2017 08:15 AM

கல் குவாரி விதிமீறல்களால் தொடரும் ஆபத்து: நிலத்தடி நீர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; பரிதவிக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் உள்ள கல் குவாரிகளில் தொடரும் விதிமீறல்களால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அரசின் கடும் நடவடிக்கை மூலம் கல் குவாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பச்சாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுயிலி கிராமத்தில் உள்ள கல் குவாரியில் சில தினங்களுக்கு முன் நேரிட்ட விபத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

கல் குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்த சூலூர் எம்எல்ஏ ஆர்.கனகராஜ், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சம்பந்தப்பட்ட குவாரியில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல் குவாரிகளில் இதுபோல விதிமீறல்கள் தொடர்வதாகவும், எம்எல்ஏ மிரட்டல் காரணமாகவே சம்பந்தப்பட்ட குவாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பச்சாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.ரமேஷ், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஏ.விஜயகுமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: விபத்து நேரிட்ட குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. இதுகுறித்து தட்டிக்கேட்பவர்களை மிரட்டுவார்கள். விபத்து நேரிட்டபோது வருவாய், கனிம வளத் துறையினருக்குக்கூட தகவல் தெரிவிக்கவில்லை.

எம்எல்ஏ ஆய்வு நடத்தியதோடு, பொது மக்களுடன் இணைந்து போராடினார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்தார். இதற்குப் பின்னரே குவாரியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவி்ட்டார்.

இதேபோல, சில குவாரிகள் விதிகளை மீறியும், ஒரிரு குவாரிகள் உரிமம் இல்லாமலும் செயல்படுகின்றன. இவற்றின் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஏற்கெனவே ஒரு தொழிலாளி மரணம்

இந்த குவாரியில் பணியாற்றிய அய்யாசாமி(49) என்பவர் 2013-ம் ஆண்டில் பணியின்போது தவறி விழுந்ததாகக் கூறி, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில நாட்களுக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மனைவி தெய்வானை(43) கூறும்போது, “எனது கணவர் இறந்த பிறகு குவாரி தரப்பில் எந்த உதவியுமே செய்யவில்லை. இதுகுறித்து குவாரி தரப்பில் கேட்டபோது, இது சம்பந்தமாக வெளியில் கூறக்கூடாது என மிரட்டினார்கள். ஆதரவற்ற நான் கூலி வேலைக்குச் சென்று, பிழைப்பு நடத்தி வருகிறேன். குவாரி தரப்பில் அல்லது அரசு சார்பில் ஏதாவது உதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன்” என்றார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

தேகாணி கிராம விவசாயி ஏ.தணிகாசலம் கூறியபோது, “கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 30 அடியில் தண்ணீர் கிடைக்கும். இப்போது 1,000 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கு குவாரிகளே முக்கியக் காரணம்.

குவாரிகளில் குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே தோண்டி பாறைகளை எடுத்து, ஜல்லிக் கற்களாக உடைக்க வேண்டும். ஆனால், 500, 600 அடிக்கு மேல் தோண்டி பாறைகளை எடுக்கின்றனர். ஒரு நாளைக்கு 150 யூனிட்களுக்குமேல் ஜல்லிக் கற்கள் தயாரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு மிகக் குறைந்த தொகையையே செலுத்துகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பாறைகளை உடைக்க வெடிகளை வைக்கும்போது, அதிக அளவு வெடிமருந்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரு கிலோமீட்டர் பரப்பில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதுடன், பாறைத் துகள்களும், தூசும் பரவி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள், தண்ணீரில் அவை படிந்துவிடுகின்றன. இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் நேரிடுகின்றன.

மேலும், பயிர்களும், அவற்றை உட்கொள்ளும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குவாரி களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல், கொத்தடிமைகளைப்போல நடத்துகிறார்கள். அங்கு நேரிடும் பல விபத்துகள் வெளியில் தெரிவதில்லை. காயமடைந்தாலோ, இறந்தாலோ குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அந்த விஷயமே வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்” என்றார்.

ஜீவாதாரங்களை இழக்கிறோம்!

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.சண்முகம் கூறும்போது, “பண பலம் மிக்க குவாரி உரிமையாளர்களை, ஏழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் எதிர்க்க முடியவில்லை. விவசாயம், கால்நடைகள் என கிராம மக்களின் ஜீவாதாரமே பாதிக்கப்படுகிறது. விதிமீறல்கள் தொடர்பாக பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. சக்திவாய்ந்த வெடிகளைப் பயன்படுத்துவதால், நிலநடுக்க அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடு, தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்பும்போது, சிறிய தொகையைக் கொடுத்தோ அல்லது மிரட்டியோ அவர்களை அமைதிப்படுத்திவிடுகின்றனர்.

பெரியகுயிலி கல் குவாரி விபத்தில் சூலூர் எம்எல்ஏவின் அதிரடிக்குப் பின்னரே அரசு நவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு முழுவதும் உள்ள கல் குவாரிகளைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.முகிலன் கூறும் போது, “கல் குவாரிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவு தோண்டுதல், வெடிமருந்தை முறையாகக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்திலும் எந்த விதியையும் கடைபிடிப்பதில்லை. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வருவாய், கனிமவளம், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், விதிமீறல்களைக் கண்டுகொள்வதில்லை. மாநிலம் முழுவதும் உள்ள கல் குவாரிகளால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இயற்கை வளம் பறிபோய்கொண்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அரசின் கடும் நடவடிக்கையே விதிமீறல்களைத் தடுக்கும் என்றார்.

உரிமம் ரத்து

கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறும்போது, “விபத்து நேரிட்ட கல் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அணி மாற மாட்டேன்: எம்எல்ஏ ஆர்.கனகராஜ்

சூலூர் எம்எல்ஏ ஆர்.கனகராஜ் கூறும்போது, “கல் குவாரி விபத்தை சாலை விபத்துபோல சித்தரிக்க முயன்றனர். நான் பிரச்சினை செய்தவுடன்தான் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிம வளத் துறையினர், லஞ்சம் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகிறார்கள். இனியும் இந்த நிலை தொடரக்கூடாது. எனது கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமத்தை ரத்து செய்துள்ளனர். எனவே, சட்டப்பேரவையில் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x