Published : 16 Sep 2016 12:34 PM
Last Updated : 16 Sep 2016 12:34 PM

கல்வி, வாழ்வாதாரத்தை தேடி இடம்பெயரும் இளைஞர்கள்: நீலகிரியில் காலியாகும் கிராமங்கள்

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்காக இளைஞர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், பல்வேறு கிராமங்கள் காலியாகி வருகின்றன.

குன்னூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கொலக்கொம்பை, மூசாபரி, மூப்பர்காடு, தூதூர்மட்டம், தைமலை, டெராமியா உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. வனம் மற்றும் தேயிலை எஸ்டேட்கள் கொண்ட இப்பகுதிகளில், பல ஆண்டுகளாக தாயகம் திரும்பியோருடன், கணிசமாக குரும்பர், இருளர் பழங்குடியினரும் வசிக்கின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலை தொழில். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களாக இருப்பர். தேயிலை பறிப்பது, கவாத்து செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

அடிப்படை வசதிகள்?

இதுதொடர்பாக கொலக்கொம்பையைச் சேர்ந்த தன்னார்வலர் சண்முகம் கூறும்போது, “பெரும்பாலான கிராமங்கள் வனத்தை ஒட்டியுள்ளன. இதனால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மின் இணைப்பு பெறுவதில் பெரும் சிக்கல் உள்ளது.

இங்குள்ள டெராமியா கிராமத்தில் 2000 பேர் வசிக்கின்றனர். வனத்துறை அனுமதி இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், தனியார் தேயிலை எஸ்டேட்கள் அதிகம் உள்ளதால், சாலைகள் அமைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எஸ்டேட்களில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்கள், வாகனப் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. எஸ்டேட் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே, தொழிலாளர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எஸ்டேட் சார்பில் அங்கன்வாடி மையங்கள், தொடக்கப் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

மேல்நிலைப் பள்ளிக்கு, குன்னூருக்குத்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உதகை, குன்னூர் அல்லது கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெயர்கின்றனர்.

வன விலங்குகள்

இந்தக் கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, யானைகள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள், குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருவது. தேயிலை தொழிலாளர்களை அவ்வப்போது கரடிகளும் தாக்குகின்றன.

சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு மேரக்காய் விவசாயம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஷாம்பூ நிறுவனங்களுக்காக மேரக்காய் கொள்முதல் செய்யப்படுவதால், இப்பகுதிகளில் அதன் விவசாயம் அதிகரித்துவிட்டது. இதனால் ஈர்க்கப்படும் யானைகள், அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்” என்றார்.

இதுதொடர்பாக உலிக்கல் பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, “மேற்குறிப்பிட்ட கிராமங்கள், தனியார் தேயிலை எஸ்டேட்களையும், வனத்தையும் ஒட்டி அமைந்துள்ளன. இங்கு மின்சாரம், சாலை வசதி ஏற்படுத்த, வனத்துறையின் அனுமதியை பெறுவதில் சிரமம் உள்ளது. நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x