Published : 23 May 2015 03:57 PM
Last Updated : 23 May 2015 03:57 PM

கல்வி நிறுவனங்களில் லஞ்ச வேட்டை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுக ஆட்சியாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதைவிட லஞ்ச வேட்டை தான் நோக்கமாக இருப்பதால் வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களை உடனடியாக மூடிவிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் வரலாறு காணாத வளர்ச்சி ஊழல் செய்வதில்தான் ஏற்பட்டதே தவிர, எந்தத் துறையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை என்றுமே இல்லாத அளவிற்கு ரூ.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின் உற்பத்தியில் ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலையில் தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் புள்ளியல் துறை மதிப்பீட்டின்படி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்திலிருந்த தமிழகம் 13 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு, படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மார்ச் 31, 2015 நிலவரப்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 85 லட்சம் பேர் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 43 லட்சம் பேர் பெண்கள் என்பது மிகமிக கவலைக்குரிய விஷயமாகும். பின்தங்கிய, மிகமிக பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 58 லட்சம் பேர் இதில் அடங்குவர். இதில் 30 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'அம்மா... அம்மா” என்று மூச்சுக்கு மூச்சுக்கு முன்னூறு முறை முழக்கமிடுகிற அதிமுக ஆட்சியில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களில் மாற்றுத் திறனாளிகள் 1 லட்சத்து 11 ஆயிரம் பேரும், பட்டப்படிப்பு படித்தவர்கள், ஆசிரியர்கள் 7 லட்சத்து 44 ஆயிரம் பேரும், மருத்துவ படிப்பு படித்தவர்கள் 8 ஆயிரம் பேரும் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. தங்களது எதிர்காலம் இருண்டமயமாகிவிட்டதே என மன உளைச்சலோடு இவர்கள் இருப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

லஞ்ச லாவண்ய ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தில் தொழில் தொடங்க எவருமே முன்வரவில்லை. எல்லாமே பேரத்தின் அடிப்படையில் நடைபெறுவதால் தொழில் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மூன்று முறை தள்ளி வைக்க வேண்டிய படுமோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்ட காரணத்தால் தான் பொறியியல் பட்டப்படிப்பு படித்த பட்டதாரிகளில் 4 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் எவருக்கும் 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகத்தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தி நேரடியாக பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 1500 கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் லஞ்சம் கொடுத்துதான் பணியில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் பதிவு செய்தவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு நேரடியாக பணி நியமனங்கள் செய்து, லஞ்ச வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடுகிற செயல் இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. அதிமுக ஆட்சியாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதைவிட லஞ்ச வேட்டை தான் நோக்கமாக இருப்பதால் வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களை உடனடியாக மூடிவிடுவதைத் தவிர வேறுவழியில்லை.

படித்து, பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றுகிற மோசடி செயலில் ஈடுபடும் அதிமுக ஆட்சியாளர்களுக்கு விரைவில் பாடம் புகட்டப்படும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x