Published : 14 Aug 2015 05:47 AM
Last Updated : 14 Aug 2015 05:47 AM

கல்பாக்கம் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு போலீஸ் ரோந்து இல்லாததே காரணம்: மீனவ கிராமத்தினர் குற்றச்சாட்டு

கல்பாக்கம் அடுத்த பழையநடுக் குப்பம் கிராமத்தில், கடற்கரையை ஒட்டிய சவுக்குத் தோப்பில் நேற்று முன்தினம் 2 குண்டுகள் வெடித்தன. உள்ளூர் பிரச்சினையை தொடர்ந்து நடைபெற இருந்த சமாதான கூட்டத்தில் வீசுவதற்கு தயாரிக்கப்பட்டபோது, அந்த குண்டுகள் தவறுதலாக வெடித்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் மீதும், கூவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் இருந்து வெடிமருந்துகள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, பழைய நடுக்குப் பம் மற்றும் வடபட்டினம் மீனவர்கள் கூறியதாவது: கடற்கரையோர பகுதிகளில் போலீஸார் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள் ளாததே இந்த சம்பவம் நிகழ காரணம். கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், மீனவ கிராம இளை ஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்த்து, கல்பாக்கத்தை ஒட்டிய கடற் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் வெடிகுண்டு தயாரித்துள்ளதால், அவர்களோடு தொடர்பில் உள்ள அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மீனவர்களின் புகார் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கண்காணிப்பாளர் மனோகரன் கூறியதாவது: மீனவ இளைஞர்கள் குறித்த விவரங்களை நன்கு விசாரித்த பிறகே, அவர்கள் ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

கடற்கரையிலிருந்து 300 மீட்டர் வரையில் மட்டுமே நாங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும். அதற்கு மேற்பட்ட பகுதிகளில் போலீஸார் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறு போலீஸாருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி கூறியதாவது: தடயங்களை ஆய்வு செய்த பின்னரே, வெடித்தவை எந்த வகையான குண்டுகள், எப்படி தயாரிக்கப்பட்டவை ஆகிய விவரங்கள் தெரியவரும். காயமடைந்த இருவரும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரணை மேற்கொள்ளப் படவில்லை. சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட உடன் விசாரிக்கப்படுவார்கள். இருவரிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னரே இதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x