Published : 29 Nov 2014 02:52 PM
Last Updated : 29 Nov 2014 02:52 PM

கர்நாடகத்தின் வழியில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: ராமதாஸ்

முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் வகையில் கர்நாடகத்தின் வழியில் தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதிப் புரட்சியை மேற்கொள்ளும் கர்நாடக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே முழுமையான சமூகநீதியை ஏற்படுத்த முடியும் என்று தந்தைப் பெரியார் கூறினார். சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைக்கும்போதெல்லாம் அளவுக்கு அதிகமான சலுகையை கேட்பதாக ஆட்சியாளர்களும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதியை பின்னுக்கு தள்ளும் செயல் என்று தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும் கருதி இதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா அளித்துள்ள விளக்கமே இவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும். ‘‘ஒவ்வொரு சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையை விடுங்கள்... ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரமே அரசிடம் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் உள்ளனர்; அவர்களின் வளர்ச்சி நிலை என்ன? அவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் அளித்துள்ளன என்பதை அறியவும், இதற்குப் பிறகும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும்’’ என்பதே சித்தராமையாவின் பதில் ஆகும்.

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்காக அம்மாநில அரசு கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கும் முழுமையாக பொருந்தும். அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று தான் அண்மையில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிர, சாதிவாரிக் கணக்கெடுப்பே தேவையில்லை என்று கூறவில்லை. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையுமில்லை.

ரூ.117 கோடி செலவில், இரு மாத அவகாசத்தில் கர்நாடகத்தில் நடத்தப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பை, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் குறைந்த செலவில், குறைந்த கால அவகாசத்தில் நடத்த முடியும். எனவே, முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x