Published : 03 Jul 2017 12:41 PM
Last Updated : 03 Jul 2017 12:41 PM

கதிராமங்கலம் போலீஸ் தடியடி சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

கதிராமங்கலம் கிராமத்தினரை காவல்துறையினர் அமைதியாக கலைந்துபோக அறிவுறுத்தியும், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கற்களை வீசி, வன்முறையில் ஈடுபட்டதால், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைந்துபோகச் செய்ததாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் திங்கட்கிழமை விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, "தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் 1.6.2001 முதல் வழங்கப்பட்ட சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில் தனியார் சிலருக்கு சொந்தமான நிலத்தை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) குத்தகைக்கு எடுத்து, கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

இதுநாள் வரையில் இந்த இடத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் கடந்த 18.5.2017 அன்று முதல் மேற்படி ஆழ்துளை கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை அங்கு கொண்டு சென்றுள்ளது.

இதனையறிந்த அப்பகுதி கிராம மக்கள், மேற்படி பணிகள் மீத்தேன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் என்று கருதி 19.5.2017 அன்று அப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினைத் தொடர்பாக கும்பகோணம் சார் ஆட்சியர் 25.5.2017, 27.5.2017 மற்றும் 31.5.2017 ஆகிய நாட்களில் கிராம மக்கள் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் கிராம மக்கள் அந்நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்று கொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.

இந்நிலையில் கடந்த 2.6.2017 அன்று ஓஎன்ஜிசி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, காவல் துறை பாதுகாப்புடன் மேற்படி கிணற்றில் பராமரிப்பு பணிகளை துவக்கியது. இதனையறிந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 9 நபர்கள் பராமரிப்பு பணிகளைத் தடுக்க முற்பட்ட போதுகைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கிணற்றின் அருகே கூடிய கிராம மக்கள் சுமார் 93 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஜெயராமன் மற்றும் 9 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, மற்றவர்கள் காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்ட ஜெயராமன் மற்றும் 9 பேர் 6.6.2017 அன்று பிணையில் வெளிவந்தனர்.

கடந்த 5.6.2017 அன்று மீண்டும் கதிராமங்கலம் கிராம மக்கள் 400 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட போது, வருவாய் மற்றும் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து போக செய்தனர்.

இதற்கிடையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினர் 2.6.2017 முதல் மேற்படி கிணற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், 30.6.2017 அன்று காலை, கதிராமங்கலம் - பந்தநல்லூர் சாலையில் வனதுர்கை அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் தரிசு நிலம் ஒன்றில் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாயில் கசிவு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக அதிகாரிகள், வருவாய் மற்றும் காவல் துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதற்குள் கதிராமங்கலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 150 பேர் அவ்விடத்தின் அருகே கூடி, சாலையில் அமர்ந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக அதிகாரிகளை அவ்விடத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததுடன், மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டுமென வலியுறுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் எடுத்துக் கூறியும் கேளாமல், எரிவாயு குழாய் கிணறு ஒன்றின் அருகில் சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்ததுடன், அவர்களுள் சிலர் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.

இத்தாக்குதலில், ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள், கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்ததுடன், காவல்துறைக்கு சொந்தமான வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.

காவல்துறையினர் கிராமத்தினரை அமைதியாக கலைந்துபோக அறிவுறுத்தியும், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கற்களை வீசி, வன்முறையில் ஈடுபட்டதால், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.

பின்னர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினர் எரிவாயு இணைப்பினை துண்டித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பத்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தற்போது கதிராமங்கலம் கிராமத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x