Published : 03 Jul 2017 04:43 PM
Last Updated : 03 Jul 2017 04:43 PM

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்க: திருமாவளவன்

கதிராமங்கலத்தைச் சார்ந்த மக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் உள்ளது. அந்தக் குழாய் சோதனை ரீதியாக எண்ணெய் எடுக்கப்பட்டு இப்போது தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளது.

மூடிவைக்கப்பட்டிருந்த குழாயில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள விளைநிலங்கள் பாழாக்கப்பட்டுள்ளன. கசிந்து பரவிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதி கிராம மக்களிடையே மிகுந்த அச்சம் உருவாகியுள்ளது. அதனால், அந்தக் கிராம பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் குழாயை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஒஎன்ஜிசி நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டுமென்றும் நியாயமான முறையில் கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பகுதி மக்கள் அறவழியில் போராடி வந்தனர்.

இந்நிலையில், தமிழக காவல்துறை அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கதிராமங்கலம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விளைநிலங்களுக்கிடையில் எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கு ஒன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழை ரத்து செய்யவேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலத்தைச் சார்ந்த மக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x