Published : 05 Jan 2017 09:04 AM
Last Updated : 05 Jan 2017 09:04 AM

கட்சிக்குள் கரையான் புகுந்துவிடக் கூடாது: அதிமுகவினருக்கு சசிகலா அறிவுரை

கட்சிக்குள் கரையான் புகுந்துவிட வழி ஏற்படுத்திவிடக் கூடாது என மாவட்ட நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாள ராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து நடந்த அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில், ஜெய லலிதாவின் தோழி வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர், அதிமுக தலைமை அலு வலகத்தில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து, சசிகலாவே தமிழக முதல்வராக வர வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சிப் பணிகள் குறித்து கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து பேச, சசிகலா முடிவெடுத்தார்.

தொடர்ந்து, ஜனவரி 4-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக் கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதன்படி, நேற்று ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நேற்று காலை வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம், கிழக்கு, மத்திய, மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய கட்சிரீதியான மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் காலை 10 மணிக்கு என்றாலும், காலை 8 மணி முதலே நிர்வாகிகள் வந்துவிட்டனர். தொடர்ந்து 10 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். காலை 10.45 மணிக்கு பொதுச் செயலாளர் சசிகலா வந்தார். 10.50 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 11.20 மணிக்கு கூட்டம் முடிந்தது. கூட்ட அரங்கில், மேடையில் சசிகலா மட்டும் அமர்ந்திருந்தார். முன்வரிசையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பொதுச் செயலாளராக சசிகலா சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சசிகலாவின் அறிவுறுத்தல்கள் குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடுவது தொடர்பான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும். பகுதி செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து செயல்வீரர்களை அரவணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் நானே பங்கேற்பேன். தொண்டர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சிக்குள் கரையான் புகுந்துவிட வழி ஏற்படுத்திவிடக் கூடாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். மாதம்தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் அதிக அளவிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சசிகலா, பகல் 12.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு, திருவள்ளூர் கிழக்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை வடக்கு,தெற்கு ஆகிய 5 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதிலும், பொதுச் செயலாளர் சசிகலா பங்கேற்று நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் நிர்வாகிகள் சந்திப்பு என்பதால், சசிகலாவுக்கு மகளிர் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-ம் நாளான இன்று காலை தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள், மாலை 4 மணிக்கு சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் ஆகிய 5 மாவட்டங்களின் நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x