Published : 22 Mar 2017 07:10 PM
Last Updated : 22 Mar 2017 07:10 PM

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றும் திமுகவின் ஆட்சி விரைவில் அமையும்: ஸ்டாலின் நம்பிக்கை

புதிய குடிநீர் திட்டங்களையும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றும் திமுக தலைமையிலான ஆட்சி வெகு விரைவில் தமிழகத்தில் அமையும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட அறிக்கையில், ''24வது உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வரலாறு காணாத வறட்சியில் சிக்கியுள்ள தமிழகத்திற்கு இந்த தினம் மிகவும் முக்கியமான தினம். சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டாடப்படும் இந்த உலக தண்ணீர் தினத்தில் மக்கள் குடிநீர் பஞ்சத்திலும், விவசாயிகள் பாசனத்திற்கு நீரின்றியும் அவதிப்படும் நிலையை தொலை நோக்கு சிந்தனை இல்லாத அதிமுக அரசு உருவாக்கி விட்டது வேதனையளிக்கிறது.

அண்டை மாநிலங்களுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர், பவானி நீர், கிருஷ்ணா நீர், சிறுவாணி நீர் உள்ளிட்டவற்றை முழுமையாக பெற முடியாத அதிமுக அரசால் இன்றைக்கு தமிழகம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி அதிமுக ஆட்சியில் நகரவே இல்லை. புதிய மெகா குடிநீர் திட்டங்கள் ஏதும் இதுவரை ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. குடிநீர் தேவை, பாசனத்திற்கு நீர் தேவை உள்ளிட்ட எதையும் மனதில் வைத்து இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உலக தண்ணீர் தினத்தன்று கவலையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால், புதிய குடிநீர் திட்டங்களையும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றும் திமுக தலைமையிலான ஆட்சி வெகு விரைவில் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கையுடன் உலக தண்ணீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்ற வேளையில், இருக்கின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x