Published : 02 Jul 2014 03:51 PM
Last Updated : 02 Jul 2014 03:51 PM

கச்சத்தீவு உரிமை: புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, அதை மறுஆய்வு செய்து, மீண்டும் புதிய மனுவை உடனடியாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

பல்லாவரத்தைச் சேர்ந்த பிஷர் மேன் கேர் அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘இந்திய - இலங்கை இடையிலான கடல் எல்லைப் பகுதி என்பது முடிந்துபோன விஷயம்’ என்று குறிப்பிட்டுள் ளது. மேலும், கச்சத்தீவை சுற்றி யுள்ள பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி உரிமை இந்திய மீனவர் களுக்கு இல்லை என்றும் தெரி வித்துள்ளது. இந்த வழக்கில் வெளி யுறவுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் இதையே வலியுறுத்தி வாதிட்டுள்ளனர்.

இதுபற்றிய செய்தியை நாளிதழ்களில் படித்ததும் வருத்தமும் துயரமும் அடைந்தேன். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை.

கடந்த மாதம் 3-ம் தேதி தங்களிடம் அளித்த மனுவில் கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமை மீட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். அத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதி என்பதே எனது அரசின் கருத்தாக எப்போதும் இருந்து வருகிறது. 285 ஏக்கர் பரப்புள்ள அந்தத் தீவு, தமிழகத்தில் ராமநாதபுரம் அரசருக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க ஆவணங்கள் உள்ளன. கச்சத்தீவு மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமை பெற்றிருந்தனர். 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா செய்துகொண்ட உடன்பாடு காரணமாக தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோனது.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தும் வகையில், 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில், தமிழக வருவாய்த்துறையும் 2011-ல் தன்னை இணைத்துக் கொண்டது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாலேயே அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அச்சமின்றி தாக்குதல் நடத்துகின்றனர்.

எனவே, 1974 மற்றும் 1976-ல் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். 1974-ல் ஜனசங்கம் தலைவராக இருந்த வாஜ்பாய்கூட, இலங்கைக்கு கச்சத்தீவு அளிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுஆய்வு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய மனுவைத் தாக்கல் செய்யும் வகையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x