Published : 16 Sep 2016 09:05 AM
Last Updated : 16 Sep 2016 09:05 AM

ஒருதலை காதல் கொலை சம்பவங்கள் தொடருவதற்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததே காரணம்: டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பெரும்பான்மையான தமிழக மக்கள் வலியுறுத்தி வருகிறார்களோ, அது கோவை மாவட்டம் அன்னூரில் மீண்டும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. காதலிக்க மறுத்ததால் தன்யா என்ற இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித நேயத்துக்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத் தக்கது.

தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ.பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.

காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. அதனால்தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடருகின்றன.

புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.

பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2013-ல் தமிழக அரசு அறிவித்த 13 அம்ச திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும். தடுப்புக்காவல் சட்டங்களை பாமக எதிர்க்கிறது என்ற போதிலும், பெண்களை பாதுகாக்க வேறு வழியில்லை என்பதால் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x