ஏற்காடு இடைத்தேர்தலில் 'நோட்டா' மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

Published : 13 Oct 2013 12:09 IST
Updated : 06 Jun 2017 12:29 IST

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 'நோட்டா' என அழைக்கப்படும் 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்ற பொத்தானை, வாக்குப் பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 'நோட்டா' வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர்களில் ஒருவரான கே.எப்.வில்ஃப்ரட், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலில் வாக்காளர்களுக்கு 'மேற்கண்ட யாருக்கும் வாக்கு இல்லை (நோட்டா)' என்ற பொத்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது வாக்குச் சீட்டில் அது தொடர்பான வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏற்காடு இடைத்தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வில்ஃப்ரட் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களுக்கு பிறகு கடைசியாக, வாக்குச்சீட்டு என்றால் 'யாருக்கும் வாக்கு இல்லை'('NOTA') என்ற வாசகமும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்றால், 'NOTA' என்று குறிப்பிடப்பட்ட பொத்தானும் அமைக்கப்பட வேண்டும். அது, வேட்பாளர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்ட அதே அளவு மற்றும் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்கள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் புதிய கையேடு, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி, தொகுதி துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor