Published : 30 Dec 2016 08:28 AM
Last Updated : 30 Dec 2016 08:28 AM

எதிர்ப்பின்றி சசிகலாவிடம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி

அதிமுகவில், தமிழக ஆட்சிப் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் அமைதியாக மாறியதைப்போல், கட்சி தலைமை மாற்றமும் எதிர்ப்பு ஏதுமின்றி, பொதுக்குழு தீர்மானம் மூலம், சசிகலாவிடம் சென்றுள்ளது.

தமிழக முதல்வராகவும், அதிமுக வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்றிரவே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆட்சி மாற்றம் என்பது மிகவும் எளிமையாக, அமைதியாக, எந்த குழப்பமுமின்றி நடந்தது. இதே போல், கட்சியின் பொதுச் செயலாளர் நியமனமும் குழப்பமின்றி நடந்து முடிந்துள்ளது.

முன்னதாக ஜெயலலிதா திடீர் மறைவால், அதிமுகவில் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையே பொதுச்செயலாள ராக முன்னிறுத்தி அறிவித்தார். இதைத்தொடர்ந்து மற்ற அமைச்சர் கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அத்துடன், கட்சி யில் உள்ள 50 மாவட்டங்களிலும், பல்வேறு அணிகள் சார்பிலும் சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றி அளித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், பொதுச்செயலா ளரைத் தாண்டி, தமிழக முதல்வராக வும் சசிகலா பொறுப்பேற்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலா ளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. தற் போது தற்காலிகமாக வழங்கப் பட்டாலும், விரைவில் நிரந்தரமாக பொதுச்செயலாளராவது உறுதி யாகிவிட்டது. பொதுச் செயலாளர் பதவியை பொறுத்தவரை, அதிமுக வில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியை தவிர, வேறு யாரும் சசிகலா வருவதை எதிர்க்கவில்லை.

எந்த கருத்தையும் தெரிவிக் காமல் இருந்த மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் கூட, நேற்று பொதுக்குழு கூட்ட மேடையில் முன்வரிசையில் அமர்ந்ததுடன், சசிகலாவை அதிமுகவின் ‘கோ பைலட்’ என வர்ணித்து பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில், எதிர்ப் பாளர்கள் யாரும் வருவதை அதிமுக நிர்வாகிகள் தவிர்த்த காரணத்தால், கட்சிப் பொறுப்பும் அதிமுகவில் சுமூகமாக, எவ்வித எதிர்ப்புமின்றி சசிகலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார். அவர் பொதுச் செயலாளராகிவிட்டாலும், முறைப் படி அதிமுக அலுவலகத்தில் ஜனவரி 2-ல் பொறுப்பேற்றுக் கொள்வார் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

சசிகலா முதல்வர்?

இதையடுத்து, சசிகலா எப்போது முதல்வராவார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தொடர் பாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படை யாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், சக அமைச்சர்களான பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சசிகலாதான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என தெரிவித்தனர். அப்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போதே சசிகலாவை முன்னிறுத்துவதா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளிக்கை யில், ‘‘ஒரு தொண்டன் தலைமைக்கு எவ்வாறு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்’’ என புகழ்ந்தார். இதன் மூலம், அவரும் சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்கிறார் என்பது உறுதியானது.

அதிமுகவை பொறுத்தவரை கட்சித்தலைமையும், ஆட்சி பொறுப்பும் ஒருவரிடம் இருப்பதைத்தான், கட்சியினரும், அமைச்சர்களும் விரும்புவதால், விரைவில் ஆட்சிப்பொறுப்பும் சசிகலாவிடம் ஒப்படைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நேற்று முன்தினம் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.பொன்னையன் பேசும்போது, ‘‘அதிமுகவில் அவர் முதல்வர், இவர் முதல்வர் என்ற பிரச்சினை எழவில்லை’’ என்ற புதிய தகவலையும் தெரிவித்துள்ளார். இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும், சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x