Published : 16 Sep 2016 09:06 AM
Last Updated : 16 Sep 2016 09:06 AM

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை செப்.19 முதல் அளிக்கலாம்: திமுக அறிவிப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபரில் நடக்க உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவும் விருப்ப மனுக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளி யிட்ட அறிக்கை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் செப். 19 முதல் 22 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

மாவட்ட அலுவலகங்களில் பெற இயலாதவர்கள் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ளது போல படிவம் தயாரித்து, மாவட்ட அலுவலகம் அல்லது தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

போட்டியிட விரும்பும் பொறுப்பு, தம்மைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு உரிய கட்டணத்துடன் மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.

மாநகராட்சி மன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட ரூ.10 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடுவோர் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொறுப்பாளர், அல்லது தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனு சமர்ப்பிப் பவரின் தனிப்பட்ட விவரங்கள், கட்சி உறுப்பினர் எண், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, ஏற்கெனவே ஊராட்சி அமைப்பு அல்லது கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கெனவே வகித்துள்ள பொறுப்பு, 2011 உள்ளாட்சித் தேர்தலில் இப்பொறுப்பு எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, வெற்றி வாய்ப்புக்கான காரணங்கள் ஆகிய விவரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x