Published : 06 Oct 2016 11:22 AM
Last Updated : 06 Oct 2016 11:22 AM

உள்ளாட்சித் தேர்தல் தடை நீடிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி முறையிடப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், வி.பார்த்திபன் அடங்கிய 2-வது அமர்வு முன் விசாரணை வந்தது.

அப்போது நீதிபதிகள், "உள்ளாட்சித் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை என உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததுமே மாநிலத் தேர்தல் ஆணையம் ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தடைபட்டதால் அதை மீண்டும் தொடர முடியாது. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணை வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், வெளிமாநில அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஒத்த தன்மையுடைய அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நிலைப்பாடு தெரியவந்தபின், அதன் அடிப்படையில் இந்த வழக்கில் முடிவு செய்யலாம். எனவே, அதுவரை தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவு நீடிக்கும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முந்தைய உத்தரவு:

'உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப் படவில்லை. எனவே, உரிய இடஒதுக்கீடு முறைகளை இந்தத் தேர்தலில் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக் கீடு ஆணைகளை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்' என கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை உரிய விதிமுறைகளை பின்பற்றி முறை யாக வெளியிடப்படவில்லை. எனவே, தேர்தல் தேதி (அக்டோபர் 17, 19) தொடர்பான அறிவிப் பாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக தேர்தல் அறிவிப்பா ணையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை நடந்துவந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. அதன்படி, தமிழக உள்ளாட்சித் தேர்தலை வரும் 24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x