Published : 31 May 2016 09:14 AM
Last Updated : 31 May 2016 09:14 AM

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாரா? - இளங்கோவனுக்கு தமிழிசை சவால்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். இதற்கு எனது கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட கடந்த 2011 தேர்தலைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். திமுக 25, அதிமுக 25, காங்கிரஸ் 15 என மொத்தம் 65 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை பாஜக நிர்ணயம் செய்ததை அனைவரும் அறிவார்கள்.

தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைவிட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கேற்ப திமுக முதுகில் சவாரி செய்த காங்கிரஸ் தான் கெட்டதோடு திமுகவின் வெற்றியையும் பறித்துவிட்டது. திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு இளங்கோவனின் பதில் என்ன?

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று

காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினைகளை தீர்க்க முடியாத இளங்கோவனுக்கு பாஜக பற்றி பேச தார்மிக உரிமை இல்லை.

நான் உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். துணிச்சல் இருந்தால் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண் டும். முதல்முறையாக சென்னையில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள் ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜகதான் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துதான் போட்டியிடும். அதுபோல காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தயாரா என இளங்கோவனுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். இதற்கு அவரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x