Published : 05 Jan 2017 12:09 PM
Last Updated : 05 Jan 2017 12:09 PM

உள்பகை இருப்பின் உடனே ஒழிப்போம்: திமுகவினருக்கு ஸ்டாலின் முதல் கடிதம்

உள்பகை இருப்பின் அதை உடனே ஒழிப்போம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமது கட்சியினருக்கு எழுதிய முதல் கடிதத்தின் விவரம்:

"திராவிட முன்னேற்ற கழகம் எனும் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை உங்களின் பேராதரவோடு, தலைவர் (கருணாநிதி) எனக்கு வழங்கியிருக்கிறார். எந்த நம்பிக்கையுடன் என்னிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நம்பிக்கைக்கு உரியவனாக என்னுடைய செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.

பெரியாரின் லட்சியங்களை அரசியல் வழியில் வென்றெடுக்க, அண்ணா உருவாக்கிய இயக்கம் இது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், பட்டிதொட்டியெங்கும் வளர்ந்து 18 ஆண்டுகளில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அதன்பின் இரண்டே ஆண்டுகளில் அண்ணா மறைந்து, அவரது உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டபோது, இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அந்த நெருக்கடியான சூழலில் கட்சியை தன் தோளிலும், திராவிட இயக்கக் கருத்தியலைத் தன் தலையிலும், தொண்டர்களைத் தன் நெஞ்சிலும் சுமந்து 48 ஆண்டுகளாக கண் துஞ்சாமல் கட்டிக் காத்து வருபவர் தலைவர்.

எத்தனை நெருக்கடிகள், எத்தனை சோதனைகள், எத்தனை பகைவர்கள், எத்தனை துரோகங்கள் லட்சியப் பயணத்தில் குறுக்கிட்டாலும், அத்தனை நெருப்பாற்றிலும் எள்ளளவும் மனம் தளாராமல் தலைவர் நீந்தி வந்தார் என்றால், அது இந்த இயக்கத்தின் தொண்டர்கள் காட்டிய குடும்பப் பாசத்தினாலும், கட்டுக் குலையாத ஆதரவினாலும் தான். 'தென்றலை தீண்டியதில்லை, தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் எழுதிய வசனம் என்பது வெறும் திரைப்படத்துக்கானதல்ல. அவரது வாழ்க்கையின் அனுபவ ஏடு.

இளமைக்காலம் தொட்டு இன்று வரையிலும் தனது கொள்கைப் பாதையில் சிறிதும் தளராமல் பயணித்து வரும் இந்தியாவின் மூத்த தலைவர் என்ற பெருமைக்குரியவர் நம் தலைவர். அவருடைய மகன் என்ற பெருமையை விட, அவருடைய லட்சோப லட்சம் உடன்பிறப்புகளில் ஒருவன் - உங்களில் ஒருவன் என்பதில் தான் எனக்கு பெருமை - பெருமிதம், ஏன் கர்வம் என்று கூட சொல்லலாம். நான் தி.மு.க.காரன் என்ற பெருமிதம் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஏனென்றால் இது சுயமரியாதை மிக்க தன்மான இயக்கம். மக்களோடு இணைந்து செயல்படுகின்ற இயக்கம். வெற்றி - தோல்விகளை கடந்து விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழர் நலன் காக்கும் திராவிட இயக்கம்.

இந்த இயக்கத்தின் பயணத்தினை தலைவர் தலைமையில் நாம் அனைவரும் மேலும் உத்வேகத்துடன் தொடர்வதற்கு உரமூட்டும் வகையிலே தான் உங்கள் அனைவரின் சார்பில் செயல் தலைவர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். இந்த பெரும்பணியில் தலைவரின் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

'ஏ.. தாழ்ந்த தமிழகமே' என அண்ணா வேதனையுடன் குறிப்பிட்டது போல, இன்றைய தமிழகத்தின் நிலை உள்ளது. பல துறைகளிலும் தளர்ச்சியும் வீழ்ச்சியும் தான் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை கட்டியமைக்கக் கூடிய இளைஞர்கள் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் அவநம்பிக்கையிலும், விரக்தியிலும் இருக்கிறார்கள். பெண்கள் இதுவரை இல்லாத பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

அதிகாரம் கையிலிருப்பதால் எல்லோரையும் வஞ்சித்துச் சுயநலச் சுகவாழ்வு வாழலாம் என நினைப்பவர்களின் பேராசையை முறியடித்து, வலிமையும் வளர்ச்சியும் மிக்கதும், சமத்துவமும் சமதர்மமும் பூத்துக்குலுங்குவதுமாக புதிய தமிழ்நாட்டை உருவாக்கக் கூடிய திறன் திமுகவுக்கு மட்டுமே உண்டு.

பெரியாரின் துணிவு - அண்ணாவின் கனிவு - தலைவரின் வலிவு, இவை மூன்றும் நமக்குத் துணை செய்யும் ஆயுதங்கள். ஜனநாயக களத்தில் அந்த ஆயுதங்களை ஏந்திச் செல்வோம். 'நமக்கு நாமே' என்கிற எண்ணத்துடன், நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக, அண்ணா வழியில், தலைவர் கட்டுப்பாட்டில், உடன்பிறப்புகளாக ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.

உள்பகை இருப்பின் அதை உடனே ஒழிப்போம். தமிழ்ப்பகை எதுவென்றாலும் அதனுடன் மோதி முறியடிப்போம். புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கின்றேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம் வாரீர்! வாரீர்! என அன்புடன் அழைக்கின்றேன்."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x