Published : 22 Mar 2017 09:15 AM
Last Updated : 22 Mar 2017 09:15 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் 62 நிறுவனங்கள் ரூ.75,557 கோடி முதலீடு: அமைச்சர் எம்.சி.சம்பத் விளக்கம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழகத்தில் 62 நிறுவனங்கள் ரூ.75,557 கோடி அளவுக்கு முதலீடு செய்து தொழில் தொடங்கியுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதரணி பேசும்போது, ‘‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் தற்போது ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே தொழில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள முதலீடுகள் வராத நிலையில், புதிய மாநாடு நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 62 நிறுவனங்கள் ரூ.75,557 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன. தொழில் தொடங்குவதற்கான காலம் 3-ல் இருந்து 7 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளும் பெறப்படும். இந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் முதலீடுகள் பெறப்படும். தமிழகத்தில் மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

-------------------------------------------------------------

முக்கிய பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்: பேரவைத் தலைவர் உறுதி

எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள முக்கியப் பிரச்சினைகள் மீதான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என பேரவைத் தலைவர் பி.தனபால் உறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘நீட் தேர்வு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடந்த போராட்டம், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட 25-க்கும் அதிகமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். இன்னும் 3 நாள்களில் பேரவைக் கூட்டம் முடிய உள்ளது. எனவே, முக்கியப் பிரச்சினைகளை உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதே கோரிக்கையை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் வலியுறுத்தினார்.

அவர்களுக்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்கள் தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் பேசியுள்ளேன். அரசிடம் இருந்து பதில் வந்ததும் முக்கியப் பிரச்சினைகள் கண்டிப்பாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x