Published : 01 Aug 2015 10:26 AM
Last Updated : 01 Aug 2015 10:26 AM

உடல் உறுப்புகள் தானம் பெற 5 லட்சம் பேர் காத்திருப்பு: கோவை மருத்துவ நிபுணர்கள் தகவல்

நாட்டில் உடல் உறுப்புகள் தானத்தை பெறுவதற்காக 5 லட்சம் பேர் காத்துக் கொண்டிருப்பதாக கோவை மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 6-ம் தேதி உலகம் முழுவதும் உடல் உறுப்பு தான நாளாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கோவையை சேர்ந்த 12 முக்கிய மருத்துவமனைகள் இணைந்து ‘பரிசளிப்போம் நமது உடல் உறுப்புகளை’ எனும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கியுள்ளன.

தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் என பல்வேறு தளங்களில் விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், பிரச்சாரப் பதாகைகள், தமிழ், ஆங்கில பிரசுரங்கள், கட்டுரைகள், வானொலி, தொலைக்காட்சி, கருத்தரங்க நிகழ்ச்சிகள் மூலம் இந்த விழிப்புணர்வு ஆகஸ்ட் 2016 வரை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சிஐஐ தலைவர் னிவாசன், டாக்டர்கள் ராஜசபாபதி, மாதவி கோபிநாத், ஆர்.வி.ரமணி, ஐஸ்வர்யா அர்ஜூன், விவேகானந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

1990-களுக்கு முன்பு ரத்த தானம், கண் தானம் பெறுவதே தமிழகத்தில் பெரிய விஷயமாக இருந்தது. மக்களிடமும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது.

தற்போது ரத்த தானமும், கண் தானமும் மக்கள் மத்தியில் முன்னிலை வகிக்கிறது. கோவையில், தற்போது ஒரு நாளைக்கு இரண்டு கண்கள் தானம் வழங்கப்படுகிறது. அதேபோல் ரத்த தானத்திலும் நிறைவு நிலை உள்ளது. பிற உடல் உறுப்புகள் தானத்திலும் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

தற்போது, நாட்டில் பல்வேறு உடல் உறுப்புகள் தானம் பெற சுமார் 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

உடல் உறுப்பு தான மாற்றுக்காக காத்திருப்போர் பட்டியலை ஒப்பிடுகையில் தானம் தருவோரின் எண்ணிக்கை மிக, மிக குறைவு. உடல் உறுப்பு தானம் என்பது மருத்துவ உலகில் சிறப்பாக இயங்கி வரும் முறை. அதில் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இதில் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; உறுப்புகளை மார்க்கெட்டில் விற்றுவிடுகிறார்கள் என்ற சந்தேகமோ, ஏமாற்றமோ கொள்ளத் தேவையில்லை என்பதை முழுமையாக பிரச்சாரம் செய்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x