Published : 23 Jan 2015 09:19 AM
Last Updated : 23 Jan 2015 09:19 AM

இளைஞர் தலையைத் துளைத்து துண்டான கத்தி வெற்றிகரமாக அகற்றம்: கோவை அரசு மருத்துவர்கள் சாதனை

மோதலின்போது இளைஞரின் தலையில் 6 செ.மீ. அளவுக்கு துளைத்து, உடைந்த கத்தியை, கோவை அரசு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.ரேவதி, செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

திருப்பூர் திருமலைநகரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் விஜயகுமார் (24). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகி றார். மோதல் காரணமாக தலையில் கத்திக் குத்துடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில், கடந்த 1-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். அவரது இடது பக்க தலையில் 6 செ.மீ. அளவுக்கு கத்தி துண்டு ஒன்று துளைத்துக் கொண்டு, சிக்கி இருந்தது. ரத்த ஓட்டம் தடைபட்டதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 4.30 மணியளவில் கொண்டு வரப்பட்டார்.

சுயநினைவு இல்லாமல் அவர் சிகிச்சைக்காக கொண்டு வரப்படும்போது, அவரது பெயர் விவரம்கூட தெரியாது. அவருடைய உயிரைக் காப்பாற்ற உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணர் எஸ்.பாலமுருகன் தலைமையிலான மருத்துவர்கள் ஜி.முருகேசன், சதீஷ்குமார், ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட குழுவினர் உடனடியாக அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.

அறுவைச் சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. தலைக்குள் 6 செ.மீ. அளவுக்கு துளைத்து சிக்கிக் கொண்டிருந்த கத்தித் துண்டு அகற்றப்பட்டது. அந்த இரும்புத் துண்டு 0.5 செ.மீ. அளவுக்கு மூளையில் துளைத்து நின்றிருந்தது.

மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சை என்றாலும் மருத்துவர்கள் அதீத கவனத்துடன் மேற்கொண்டு, ரத்தக்கட்டியையும் நீக்கி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். மூளைக்குள் கத்தி பாய்ந்த இடமானது பேச்சு மற்றும் செயல்களை ஊக்குவிக்கும் இடமாகும். சிகிச்சை மூலமாக காப்பாற்றப்பட்டுள்ள அவர், நேற்று வீடு திரும்பினார். தற்போது, அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x