Published : 01 Aug 2015 04:05 PM
Last Updated : 01 Aug 2015 04:05 PM

இளைஞர் எழுச்சி நாள்: ஜெ. அறிவிப்புக்கு விஜயகாந்த் அதிருப்தி

அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதியன்று இளைஞர்கள் எழுச்சி நாளாக ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் இளைஞர்களைக் கொண்டு நம் தேசத்தை முன்னேற்றலாம் என்று நம்பியவர் சுவாமி விவேகானந்தர். எனவேதான் அவருடைய பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று மாணவர்களைக் கொண்டு மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஆவார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியை வகித்தபோதும், ஒரு பேட்டியின்போது தன்காலத்திற்கு பிறகும் தான் ஒரு ஆசிரியராக அறியப்படுவதே பெருமை என்று கூறியவர். அவர் நினைத்தபடியே தன் வாழ்நாளெல்லாம் மாணவர்களோடு கலந்துரையாடுவதும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையூட்டுவதுமாக, அவர்களுக்கு அறிவுப்பூர்வமான கருத்துகளை பரிமாறி வந்தவர்.

தன்னுடைய இறுதி மூச்சுவரை மாணவர்களுடன் இரண்டற கலந்திருந்தார் என்பதால்தான் அவரது பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டுமென்றும், அவரது புகழை அகில உலகமும் மிக விமரிசையாக, கொண்டாட வேண்டுமென்றும் பாரத பிரதமரை கேட்டுக்கொண்டேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்கின்ற போக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற இளைஞர் தினத்தை மீண்டும் வேறொரு பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்திருப்பது டாக்டர் அப்துல் கலாம் ஆத்மாவாலயே ஒத்துக் கொள்ளமுடியாத முரண்பாடான செயலாகும். ஆனாலும் தமிழக அரசின் அறிவிப்பு எனக்கும், தேமுதிகவிற்கும் கிடைத்த வெற்றியாகவே இளைஞர்களும், மாணவர்களும் கருதுகிறார்கள்.

நான் கூறியபடி அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக ஆண்டுதோறும் மிக விமரிசையாக தேமுதிக சார்பில் கொண்டாடப்படுமென தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x