Published : 06 Jan 2015 09:12 AM
Last Updated : 06 Jan 2015 09:12 AM

இந்திய விடுதலைப் போராட்டத்தின் பாதையை தீர்மானித்த திருக்குறள்: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பெருமிதம்

“இந்திய விடுதலைப் போராட்டம் அகிம்சை வழியில் அமைவதை தீர்மானித்தது திருக்குறள்தான்” என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குறிப்பிட்டார்.

முதுபெரும் தமிழறிஞர்கள் சாமி.சிதம்பரனார், மயிலை சீனி.வேங்கடசாமி, க.வெள்ளை வாரணனார் மற்றும் இரா.இளங்கு மரனார் ஆகியோர் எழுதிய நூல்களின் 83 தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னைப் பல்கலைக்கழக பவள விழா அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழ்மண் பதிப்பகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமை வகித்து பழ.நெடுமாறன் பேசியதாவது:

“ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது ரஷ்ய நாட்டின் மிகச் சிறந்த இலக்கியவாதியான லியோ டால்ஸ்டாயின் ஆதரவு கோரி இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு கடிதம் எழுதினார். அந்த பத்திரிகையாளருக்கு லியோ டால்ஸ்டாய் பதில் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் அகிம்சை வழியிலான போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருந்த லியோ டால்ஸ்டாய், தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ‘இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தின் கீழ் திருவள் ளுவர் எழுதியுள்ள திருக்குறள் களை சுட்டிக் காட்டியிருந்தார்.

லியோ டால்ஸ்டாயின் அந்தக் கடிதம் பத்திரிகையில் பிரசுரமானது. அந்தக் கடிதத்தை மகாத்மா காந்தியடிகளும் படித்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியடிகள் அந்த நாட்டில் எந்த வகையான போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுப்பது என்பதற்கு லியோ டால்ஸ்டாயின் அந்தக் கடிதமே உந்து சக்தியாக திகழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து காந்தி யடிகளே லியோ டால்ஸ்டாயுடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்துள்ளார். அதன் பலனாக தென்னாப்பிரிக்காவில் அகிம்சை வழி போராட்டத்தை தொடங்கிய காந்தியடிகள், பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட களத்திலும் அகிம்சை வழி போராட்டங்களை புகுத்தினார்.

இவ்வாறு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாதையை தீர்மானிக்க மிக முக்கிய காரணி யாகத் திகழந்த திருக்குறளை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காரணத்தாலேயே லியோ டால்ஸ்டாயால் அதனை படிக்க முடிந்தது.

ஆகவே, பண்டைய இலக்கி யங்களை தொகுப்பதும், இன்றைய தலைமுறைக்காக அவற்றை பதிப்பிப்பதும் மிக மிக முக்கிய பணியாகும். அந்த வகையில் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல தமிழறிஞர்களின் படைப்புகளை தேடித் தேடித் திரட்டும் தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகன், அவற்றை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார் பழ.நெடுமாறன்.

விழாவில் பேசிய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மு.பொன்னவைக்கோ, “தமிழ்மண் பதிப்பகத்தார் இது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான தமிழ் நூல் தொகுதி களை வெளியிட்டுள்ளனர்” என பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஆத்மானந்த அடிகளார், தமிழறிஞர் முனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் ப.நக்கீரன், கவிஞர் காசி ஆனந்தன், பேராசிரியர் வீ.அரசு உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x