Published : 05 Jan 2017 09:10 AM
Last Updated : 05 Jan 2017 09:10 AM

இந்தியா முழுவதும் 76 இடங்களில் புஹாரி குழும நிறுவனங்கள், வீடுகளில் சோதனை

புஹாரி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான். இவர் உருவாக்கியதுதான் புஹாரி குழுமம். இந்நிறுவனம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், காப்பீடு (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்), மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கல்வி நிறுவனங்கள் உட்பட பல தொழில்களை செய்து வருகிறது. புஹாரி குழுமமும், துபாயை தலைமையிடமாகக் கொண்ட இ.டி.ஏ. குழுமமும் இணைந்து இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றன. பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் மகன்கள் ஆரிப், அப்துல் காதர், அகமத், அஸ்ரப் மற்றும் 2 மகள்கள் இந்த தொழில்களை நிர்வகித்து வருகின்றனர்.

புஹாரி குழும நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும், நிலக்கரி இறக்குமதியில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

76 இடங்களில் சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் நிழற்சாலை 3-வது தெருவில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் வீடு, அதே பகுதியில் 1-வது தெருவில் உள்ள மற்றொரு வீடு, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர், சாலிகிராமத்தில் ஹைபவர் என்ற பெயரில் உள்ள மின்சார இயங்திரங்கள் தயாரிக்கும் நிறுவன அலுவலகம், வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிரசன்ட் பொறியியல் கல்லூரி, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள புஹாரி டவர்ஸ், வேளச்சேரி சுலைகா கார்ஸ் உட்பட 17 இடங்களில் சோதனை நடந்தன. மேலும் மதுரை, தூத்துக்குடி, கீழக்கரை உட்பட தமிழகம் முழுவதும் புஹாரி குழுமத்துக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன. அங்கேயும் நேற்று சோதனை நடத்தப்பட்டன. இந்தியா முழுவதும் மொத்தம் 76 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.

ஆவணங்கள் வைக்க தனி வீடு

சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் நிழற்சாலை 1-வது தெருவில் உள்ள வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை. அந்த வீட்டை ஆவணங்கள் வைக்க மட்டுமே புஹாரி குழுமத்தினர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் இந்த வீட்டில் மட்டும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். சிட்டி சென்டரில் 5-வது தளத்தில் புஹாரி நிறுவன அலுவலகம் உள்ளது.

இங்கேயும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வளசரவாக்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்தியாவில் வருமான வரித்துறை யினர் நடத்திய சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலான சோதனை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை மேலும் சில நாட்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அண்ணா மேம்பாலம் கட்டிய நிறுவனம்

தற்போது பல்நோக்கு மருத்துவ மனையாக செயல்படும் புதிய தலைமைச் செயலக கட்டிடம், அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் என அரசு சார்பில் கட்டப்பட்ட பல கட்டிடங்களை இந்த புஹாரி குழுமமே கட்டியிருக்கிறது. சென்னை சிட்டி சென்டர் உட்பட இந்தியா முழுவதும் பல வணிக வளாகங்களையும், கட்டிடங்களையும், பாலங்களையும் இந்நிறுவனம் வடிவமைத்து கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x