Published : 11 Mar 2015 08:25 AM
Last Updated : 11 Mar 2015 08:25 AM

ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடந்த ஓராண்டு காலமாக வெவ்வேறு மாதிரியான பதில்கள் வந்து கொண்டிருப்பதால், சரவண குமார் என்னும் மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசு சார்ந்த கேள்விகளை கேட்டு பதில்களைப் பெறுவதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டால் அதற்கு முறையாக பதில்கள் வருவதில்லை என்றும், சம்பந்தமே இல்லாமல் நூற்றுக் கணக்கான கடிதங்களை அனுப்பி மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தருமபுரியை சேர்ந்த அ.ப.சரவணக்குமார் என்ப வர் ‘தி இந்து’ விடம் கூறிய தாவது:

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு மூடப்போவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, “அண்ணா நூலகம் கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? அதனுடைய செயல்பாடுகள் எப்படி உள்ளது? அதை ஏன் மூட வேண்டும்? தமிழகத்தில் அண்ணா மறுமலர்ச்சி நூலகத் திட்டத்தின்படி எத்தனை கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன?” என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய மனுவை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தேன்.

மனு அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிமுறை. ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே, மீண்டும் தலைமைச் செயலகத்தின் மேல் முறையீட்டு அலுவலரிடம் மனு செய்தேன். இம்முறை எனது கேள்விகள் நூலகத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தலைமைச் செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட எனது கடிதத்தின் ஒரு பக்கத்தை காணவில்லை என்று நூலகத்துறை அதிகாரிகள் கூறினார்கள். நான் மீண்டும், எனது மனுவின் நகலை அவர்களிடம் அளித்தேன். அப்போது, ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டதாக பதில் அளித்தார் கள். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்படி உருவாக்கப்பட வுள்ள நூலகங்கள் குறித்த கேள்விகள் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப் பட்டன. இதன்பேரில் தான் தினமும் வெவ்வேறு பதில் கடிதங்கள் வருகின்றன. இதுவரை 100-க்கும் அதிகமான கடிதம் வந்துள்ளன. ஒரு துறை என்றால், அதன் தலைமையிடமான இயக்குநரகத்தில் அந்த துறை சார்ந்த அனைத்து தகவல்களும் கட்டாயம் இருக்கும். ஆனால் மனுதாரர்களை அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் கிளை அலுவலகங்களுக்கு மனுவை அனுப்பி வைக்கிறார்கள்.

இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. இந்த கடிதங்களில் உரிய பதிலையும் சொல்வதில்லை. தினமும் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். பெரிய அளவில் தபால் கட்டுகள் குவிந்து கொண்டே போகிறது. மனு செய்பவர்களை முட்டாளாக்குவது போல் இருக்கும் இந்த நடைமுறை மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பொது நூலகத் துறையின் கூடுதல் இயக்குநரி டம் கேட்டபோது, “மாநில அலுவ லகத்தில் எல்லா தகவல்களும் இருக்காது. அரசுக்கு தேவையான தகவல்கள் மட்டும் மாவட்டங் களிலிருந்து வாங்கிப் பெற்றுக் கொள்ளப்படும்” என்றார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும் சட்டப்பஞ்சாயத்து இயக்க ஒருங் கிணைப்பாளருமான செந்தில் ஆறு முகத்திடம் கேட்டபோது, “இதற்கு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும். ஏதோ எந்திரங்கள் போல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். உரிய பதில் வராவிட்டால் மேல் நடவடிக்கை நிச்சயம் என்ற நடைமுறை வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x