Published : 22 Mar 2017 07:55 AM
Last Updated : 22 Mar 2017 07:55 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் உட்பட 7 பேர் வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன் உட்பட 7 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.லோகநாதன், அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தவிர எம்.கொளஞ்சி, பி.புவனேஸ்வரி, ஏ.வெங்கடேஷ், ஈ.களந்தர், எம்.எல்.ரவி, எம்.வசந்தகுமார் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் முடிந்து வேட்பாளருடன் வெளியே வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறிய தாவது:-

தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில் அரசியல் மாற்று தேவைப்படுகிறது. இதனை முன்னெடுத்துச் செல்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறார். வகுப்புவாதம், தமிழகத்தில் மலிந்துவிட்ட ஊழல், பொது விநியோக முறை சீர்குலைந்திருப்பது, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது, கைது செய்வது, கொல்வது போன்றவற்றைக் கண்டித்தும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை முன்னிறுத்தியும் மக்களை அணுகு வோம். இத்தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற முழக்கத்தோடும் வாக்காளர்களை அணுகுவோம்.

மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது. மக்கள் நல கூட்டியக்கம் என்பது போராட்டக் களத்தில் உருவான ஒற்றுமை. அந்த இயக்கம் இன்றும் தொடர்கிறது. நாளையும் தொடரும் என்றார் ராமகிருஷ்ணன்.

வேட்பாளர் லோகநாதன் கூறுகையில், “இத்தொகுதியில் நீண்டகால பிரச்சினையாக இருப்பது கொடுங்கையூர் குப்பை மேடு வளாகம். நான் வெற்றி பெற்றால் இந்த வளாகத்தை அப்புறப்படுத்த அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள் வேன். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையை மாற்றுவது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்” என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23. எனவே, மார்ச் 22, 23 தேதிகளில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x