Published : 31 May 2016 07:14 PM
Last Updated : 31 May 2016 07:14 PM

அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு நிதியுதவி

சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 10 பேருக்கு தலைசிறந்த தனியார் பள்ளிகளில் படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவிகள் என மொத்தம் 10 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் விரும்பும் தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க அரசால் நிதிஉதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகை கட்டிடத்தில் 3-வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x